'நான் ராமர் தன்னார்வ சேவகர்; என்னை கைது செய்யுங்கள்'
'நான் ராமர் தன்னார்வ சேவகர்; என்னை கைது செய்யுங்கள்'
'நான் ராமர் தன்னார்வ சேவகர்; என்னை கைது செய்யுங்கள்'
ADDED : ஜன 05, 2024 04:58 AM

பெங்களூரு : காங்கிரஸ் அரசை கண்டித்து, 'நான் ராமர் தன்னார்வ சேவகர், என்னை கைது செய்யுங்கள்' என, போலீஸ் நிலையம் முன் பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர்.
பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தை ஒட்டி, 31 ஆண்டுகளுக்கு முன்பு, ஹுப்பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக, ஹிந்து சேவகர் ஸ்ரீகாந்த் பூஜாரி ஐந்து நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படும் வேளையில், அரசின் செயலை கண்டித்து, கர்நாடகா முழுதும் பா.ஜ.,வினர் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர்.
காங்கிரஸ் அரசு, ஹிந்து விரோத அரசு என்றும், முதல்வர் சித்தராமையா ஹிந்து விரோதி என்றும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதற்கிடையில், 'நான் ராமர் தன்னார்வ சேவகர், என்னை கைது செய்யுங்கள்' என்ற புதிய போராட்டத்தை பா.ஜ.,வினர் நேற்று துவக்கினர்.
பெங்களூரு சதாசிவநகர் போலீஸ் நிலையம் முன், கார்காலா பா.ஜ., - எம்.எல்.ஏ., சுனில்குமார்; சிக்கமகளூரு போலீஸ் நிலையம் முன், முன்னாள் எம்.எல்.ஏ., சி.டி.ரவி ஆகியோர் நேற்று பதாகைகளை ஏந்திக் கொண்டு, தனி ஆளாக போராட்டம் நடத்தினர்.
அப்போது, சுனில் குமார் கூறியதாவது:
அயோத்தி ராமர் கோவில் தொடர்பாக, 1990 - 92ல் நடந்த போராட்டத்தில், கர்நாடகாவிலும் ஆயிரக்கணக்கான ராமர் தன்னார்வ சேவகர்கள் பங்கேற்றனர்.
அப்போதைய காங்கிரஸ் அரசின் மிரட்டலுக்கும் பணியாமல், போராட்டம் நடத்தப்பட்டது. தற்போது, ராமர் கோவில் திறக்கப்படும் வேளையில், ராமர் பக்தர்களை காங்கிரஸ் அரசு மிரட்டுகிறது.
இதை கண்டித்து பா.ஜ., தரப்பில் தீவிர போராட்டம் நடத்தப்படும். ராமர் பக்தர்களை கிரிமினல்களுடன், முதல்வர் சித்தராமையா ஒப்பிடுகிறார்.
மங்களூரில் குக்கர் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட பயங்கரவாதி, அப்பாவி என்று காங்கிரசார் கூறினர்.
கே.ஜி.ஹள்ளி, டி.ஜே.ஹள்ளி கலவரத்தில் ஈடுபட்டவர்கள், சகோதரர்களாக கருதுகின்றனர். ஆனால், ராமர் பக்தர்களை மட்டும், கிரிமினல்கள் போன்று பார்க்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின், சுனில்குமாரை கைது செய்த போலீசார், மாலையில் விடுவித்தனர்.
ஸ்ரீகாந்த் பூஜாரியை கைது செய்த போலீஸ் இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்யும்படி, பா.ஜ.,வினர் வலியுறுத்துகின்றனர். அவரை பணியிடை நீக்கம் செய்ய முடியாது. அவர் என்ன தவறு செய்துள்ளார்? கடமையை தான் செய்துள்ளார்.
-பரமேஸ்வர், அமைச்சர், உள்துறை