ஹெல்மெட்டால் அடித்து மனைவியை கொன்ற கணவர்
ஹெல்மெட்டால் அடித்து மனைவியை கொன்ற கணவர்
ஹெல்மெட்டால் அடித்து மனைவியை கொன்ற கணவர்
ADDED : ஜன 08, 2024 06:53 AM
தாவணகெரே: வரதட்சணைக்காக தொந்தரவு கொடுத்ததுடன், ஹெல்மெட்டால் மனைவியை அடித்து கொலை செய்த கணவரை, போலீசார் கைது செய்தனர்.
தாவணகெரே, சென்னகிரியின், நுக்கிஹள்ளி கிராசில் வசிப்பவர் திப்பேஷ், 28. இவர் தன் உறவினரின் மகளான யசோதா, 23, என்பவரை காதலித்தார். திப்பேஷ் மீது, யசோதாவின் குடும்பத்தினருக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. எனவே அவருக்கு மகளை திருமணம் செய்து கொடுக்க சம்மதிக்கவில்லை.
ஆனால் பிடிவாதமாக இருந்த யசோதா, ஆறு மாதங்களுக்கு முன் கோவிலில் திப்பேஷை திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில மாதங்களில், திப்பேஷின் சுயரூபம் வெளியே வந்தது. வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்த துவங்கினார். மூன்று மாத கர்ப்பிணியான யசோதா, தாய் வீட்டுக்கு சென்றிருந்தார்.
மனைவியை மீண்டும் தன் வீட்டுக்கு அழைத்து சென்று, அடித்து துன்புறுத்தினார். ஜனவரி 4ல் ஹெல்மெட்டால் அடித்து, மனைவியை கொலை செய்தார். விபத்தில் மனைவி இறந்ததாக நாடகமாடினார்.
யசோதாவின் உடலில் காயங்கள் இருப்பதை கண்டு, அவரது தந்தை சந்திரப்பா, சந்தேகமடைந்து சென்னகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசாரும், திப்பேஷை தீவிரமாக விசாரித்ததில், ஹெல்மெட்டால் அடித்து மனைவியை கொன்றதை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.