தங்கவயல் சுற்றுலா மையம் ஆக்கப்படும்: உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தகவல்
தங்கவயல் சுற்றுலா மையம் ஆக்கப்படும்: உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தகவல்
தங்கவயல் சுற்றுலா மையம் ஆக்கப்படும்: உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தகவல்
ADDED : ஜன 03, 2024 11:23 PM

தங்கவயல் : ''தங்கவயல் வரலாற்றை அழியவிடக் கூடாது. இந்த வரலாற்றை அடுத்து வரும் தலைமுறைகளும் அறியும்படி சுற்றுலா மையம் ஆக்குவது குறித்து திட்டம் தயாரிக்கப்படும்,'' என, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.
கோலார் மாவட்டம் தங்கவயல் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திற்கு நேற்று வந்த கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், தங்கவயல் போலீஸ் மாவட்ட பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்தார்.
அவர் அளித்த பேட்டி:
தங்கவயலும் ஒரு போலீஸ் மாவட்டம். போலீஸ் துறையில் உள்ள பிரச்னைகள், மேற்கொள்ள வேண்டிய முன்னேற்ற பணிகள், நவீன தொழில்நுட்பம் பற்றி ஆய்வு செய்யப்பட்டது.
தங்கவயலுக்கென வரலாறு உள்ளது. இது போன்ற வரலாறு, நாட்டில் ஒரு சில இடங்களில் மட்டுமே காண முடியும். தங்கவயல் வரலாற்றை அழியவிடக் கூடாது.
அடுத்து வரும் தலைமுறைகளும் அறியும்படி சுற்றுலா மையம் ஆக்குவது குறித்து திட்டம் தயாரிக்க வேண்டும். இதற்கான நிதியை அரசே ஏற்றுக் கொள்வதா அல்லது தனியார், அரசு கூட்டு முயற்சியில் ஏற்படுத்தலாமா என்பது குறித்து முதல்வருடன் பேசி முடிவு செய்யப்படும்.
கர்நாடக அரசு போலீஸ் பயிற்சி மையத்தை தங்கவயலில் அமைக்க ஆலோசிக்கப்பட்டது. ஒரு பட்டாலியனில் 1,000 பேர் இருப்பர். இந்த பயிற்சி மையம் அமைக்க 500 கோடி ரூபாய் நிதியை முதலீடு செய்ய வேண்டும். இது குறித்து பரிசீலிக்கப்பட்டது.
தங்கவயல் போலீஸ் மாவட்டத்தில், 30 சதவீதம் குற்ற வழக்குகள் அதிகரித்துள்ளது என்றால், தற்போது குற்றங்கள் பதிவு செய்கின்றனர் என்பது அர்த்தம். இதற்கு முன் அவ்வாறு வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை.
குற்ற வழக்குகள் பதிவு செய்வது அதிகரிப்பதால் சட்டம் - ஒழுங்கு சரியல்ல என்பது அர்த்தம் அல்ல. கர்நாடகாவில் சைபர் குற்றங்களுக்கென, 46 சைபர் போலீஸ் நிலையங்கள் உள்ளன. இதன் வழக்குகள் பதிவு செய்வதும் அதிகரித்துள்ளது.
தங்கச் சுரங்கம் மூடப்பட்ட பின், அதன் சொத்துகளை பாதுகாக்க, தேவைப்பட்டால் மாநில அரசு வசதிகளை செய்து தரும். தங்கவயலில் போக்குவரத்து போலீஸ் நிலையம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தங்கவயல் ரூபகலா, பங்கார் பேட்டை நாராயணசாமி உடன் இருந்தனர்.
இதைத் தொடர்ந்து, பங்கார்பேட்டை தொகுதியில் உள்ள பூதிகோட்டை போலீஸ் நிலைய புதிய கட்டடத்தை திறந்துவைத்தார்.