ஹரியானாவில் அரசு அனைத்து வாகனங்களிலும் இருப்பிடத்தை அறியும் கருவி பொருத்த முடிவு
ஹரியானாவில் அரசு அனைத்து வாகனங்களிலும் இருப்பிடத்தை அறியும் கருவி பொருத்த முடிவு
ஹரியானாவில் அரசு அனைத்து வாகனங்களிலும் இருப்பிடத்தை அறியும் கருவி பொருத்த முடிவு
ADDED : ஜூன் 24, 2025 07:43 PM
சண்டிகர்:''ஹரியானா மாநிலத்தில் ஓடும் அனைத்து அரசு போக்குவரத்து வாகனங்களிலும், அவற்றின் இருப்பிடத்தை அறிந்து கொள்ளும் கருவிகள் பொருத்தப்படும். இதன் மூலம் அவற்றில் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்,'' என, ஹரியானா மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
ஹரியானாவில், பா.ஜ.,வைச் சேர்ந்த நயாப் சிங் சைனி முதல்வராக உள்ளார். போக்குவரத்து துறை தொடர்பான கூட்டம் நேற்று அவர் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு பின், முதல்வர் சைனி கூறியதாவது:
மாநிலத்தில் ஓடும் அரசு பஸ்களில் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது தான், எங்கள் அரசின் முக்கிய கடமை. எனவே, 'நிர்பயா' எனும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ், அனைத்து அரசு போக்குவரத்து வாகனங்களும் எங்கு செல்கின்றன என்பதை உடனுக்குடன் கண்டறியும் வகையிலான கருவிகள் பொருத்தப்படும்.
ஒவ்வொரு விபத்தும் ஏன் நடந்தது என்பது குறித்து ஆராய்ந்து, எதிர்காலத்தில் அத்தகைய விபத்துகள் நடைபெறாத வண்ணம் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அனைத்து பள்ளி வாகனங்களும், தகுதி சான்றுகளை பெற்றுள்ளனவா என்பதை ஆராய உத்தரவிட்டுள்ளேன். பள்ளி வாகனங்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வுக்கு உட்படுத்தி, குறைகள் இருப்பின் சரி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்துள்ளோம்.
ஹரியானா சாலை போக்குவரத்து துறை டிரைவர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
மாநிலத்தின் முக்கிய நகரங்களில், கூடுதலாக, 375 எலக்ட்ரிக் பஸ்கள் விரைவில் இயக்கப்படும். மேலும், பிரதமரின் எலக்ட்ரிக் பஸ்கள் சேவை திட்டத்தின் கீழ், கூடுதலாக, 250 எலக்ட்ரிக் பஸ்கள் கொள்முதல் செய்யப்படும்.
இவ்வாறு முதல்வர் சைனி கூறினார்.