ஹத்ராஸ் சம்பவம்: முதல்வர் யோகி நேரில் ஆறுதல்; உடல்களை பார்த்து உயிரைவிட்ட போலீஸ்
ஹத்ராஸ் சம்பவம்: முதல்வர் யோகி நேரில் ஆறுதல்; உடல்களை பார்த்து உயிரைவிட்ட போலீஸ்
ஹத்ராஸ் சம்பவம்: முதல்வர் யோகி நேரில் ஆறுதல்; உடல்களை பார்த்து உயிரைவிட்ட போலீஸ்
UPDATED : ஜூலை 03, 2024 03:10 PM
ADDED : ஜூலை 03, 2024 12:09 PM

லக்னோ: கூட்டநெரிசலில் சிக்கி காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதற்கிடையே, மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த 30 வயது போலீஸ், சடலங்களை கண்டு, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஹத்ராஸ் மாவட்டத்தின் சிகந்த்ரா ராவ் பகுதியில் உள்ள புல்ராய் என்ற கிராமத்தில் திறந்தவெளியில் போலே பாபா என்பவரின் ஆன்மிக சொற்பொழிவு கூட்டம் நேற்று நடந்தது. போலே பாபா பேசி முடித்ததும், கூட்டத்தில் பங்கேற்றவர்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு வெளியேறினர்.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி, 116 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர், பெண்கள் மற்றும் குழந்தைகள். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். காயமடைந்தவர்களை மருத்துவமனையில் இன்று(ஜூலை 03) யோகி ஆதித்யநாத் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
நீதி விசாரணை
பின்னர் செய்தியாளர்களிடம் யோகி ஆதித்யநாத் கூறியதாவது: மொத்தம் 121 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் உ.பி., ஹரியானா, ம.பி., ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள்; 6 பேர் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். காயமடைந்த 31 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், கிட்டத்தட்ட அனைவரும் ஆபத்தான நிலையில் உள்ளனர். நான் நேரில் சென்று பலருடன் பேசினேன். நிகழ்ச்சி முடிந்ததும், போலே பாபா என்ற சாமியார் மேடையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென்று பல பெண்கள் அவரைத் தொட்டு வணங்க முன்னோக்கி சென்றுள்ளனர். அவர்களை தடுத்து நிறுத்தியதால், இந்த விபத்து நடந்துள்ளது.
ஏடிஜி ஆக்ரா தலைமையில் எஸ்.ஐ.டி., விசாரணையை அமைத்துள்ளோம். ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது. நிர்வாகம் மற்றும் காவல்துறையின் ஓய்வுபெற்ற மூத்த அதிகாரிகளும் இதில் ஒரு அங்கமாக இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
உயிரைவிட்ட போலீஸ்
ஹத்ராஸில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த 30 வயது போலீஸ், சடலங்களை கண்டு, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.