ரவீந்திர கலாஷேத்ரா புதுப்பிப்பு திட்டத்தை கைவிட அரசு முடிவு
ரவீந்திர கலாஷேத்ரா புதுப்பிப்பு திட்டத்தை கைவிட அரசு முடிவு
ரவீந்திர கலாஷேத்ரா புதுப்பிப்பு திட்டத்தை கைவிட அரசு முடிவு
ADDED : பிப் 12, 2024 06:58 AM

பெங்களூரு: பெங்களூரு ரவீந்திர கலாஷேத்ராவை, 24 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தும் திட்டத்தை, கைவிட மாநில அரசு முடிவு செய்துள்ளது.
பெங்களூரின் ரவீந்திர கலாஷேத்ரா எனும் நாடக அரங்கை, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலவிட்டு, மாநகராட்சி புதுப்பித்தது.
நல்ல நிலையில் உள்ள கட்டடத்தை, 24 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்த கன்னடம், கலாசார துறை திட்டமிட்டது. இதற்கு கலைஞர்கள், இலக்கியவாதிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் ஆட்சேபனை தெரிவித்தனர்.
இலக்கியவாதி மருள சித்தப்பா, இந்த விஷயத்தை முதல்வர் சித்தராமையாவின் கவனத்துக்கு கொண்டு சென்றார். சமூக வலைதளங்களிலும் ஆட்சேபனை வெளியானது. 'நல்ல நிலையில் உள்ள கட்டடத்தை, பழுது பார்க்க வேண்டிய அவசியம் என்ன' என கேள்வி எழுப்பினர்.
நாடக கலைஞர்களும் கன்னடம், கலாசாரத் துறை அமைச்சர் சிவராஜ் தங்கடியை சந்தித்து, பிரச்னையை விவரித்தனர்.
'ரவீந்திர கலாஷேத்ராவில் 24 கோடி ரூபாய் செலவிட்டு, குளிர்சாதன வசதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நவீனப்படுத்தப்பட்ட பின், வாடகை கட்டணம் அதிகரிக்கும்; அதிக கட்டணம் செலுத்தி நாடகங்கள் ஏற்பாடு செய்யும் சக்தி, நாடக கலைஞர்களுக்கு இல்லை.
'பழுதடைந்துள்ள ஒலி பெருக்கி, மின் விளக்குகளை சரி செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும். மேடை மீது வைக்க அலங்கார நாற்காலிகள் வழங்க வேண்டும். தேவையான ஊழியர்களை நியமிக்க வேண்டும்' என வேண்டுகோள் விடுத்தனர்.
இதை ஏற்றுக்கொண்ட அமைச்சர் சிவராஜ் தங்கடகி, 'என் பதவி காலத்தில், பெயர் சொல்லும்படி பணியாற்ற வேண்டும் என்பது, என் நோக்கமாக இருந்தது. எதிர்ப்பு எழுந்துள்ளதால், கலாஷேத்ராவை நவீனப்படுத்தும் திட்டத்தை கை விடுவோம்' என உறுதி அளித்தார்.