விட்டு கொடுங்க மாமா... விட மாட்டேன் மருமகனே!
விட்டு கொடுங்க மாமா... விட மாட்டேன் மருமகனே!
விட்டு கொடுங்க மாமா... விட மாட்டேன் மருமகனே!
ADDED : ஜன 31, 2024 07:32 AM
கர்நாடகாவில் பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருக்கும் குஷியில், லோக்சபா தேர்தலுக்கு காங்கிரஸ் தயாராகி வருகிறது. வெற்றி வாய்ப்புள்ள தொகுதிக்கு, 'துண்டு' போடுவதில் சில தலைவர்கள், முன்னாள் எம்.பி.,க்கள் ஈடுபட்டுள்ளனர்.
இம்முறை அதிகமான தொகுதிகளில், வெற்றி பெற ஆர்வம் காண்பிக்கும் காங்கிரஸ், வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகிறது. ஏற்கனவே மேலிடம் ஆய்வு நடத்தியுள்ளது. எட்டு முதல் ஒன்பது தொகுதிகளில் அமைச்சர்களுக்கு செல்வாக்கு உள்ளது. இவர்களை களமிறக்கினால் வெற்றி உறுதி என, ஆய்வறிக்கையில் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. எனவே அமைச்சர்களை லோக்சபா தேர்தலுக்கு தயாராகும்படி, மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் பிடிவாதம்
ஆனால் சில அமைச்சர்களுக்கு, இதில் உடன்பாடு இல்லை. தேசிய அரசியலில் தங்களுக்கு நாட்டமில்லை என கூறி, லோக்சபா தேர்தலில் போட்டியிட மறுக்கின்றனர். கட்சியின் நலனுக்காக போட்டியிட வேண்டும் என, காங்., மேலிடம் கட்டாயப்படுத்துகிறது.
கோலார் மாவட்டத்தை, தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள, தன்னுடையதேயான செல்வாக்கை வைத்துள்ளவர், முன்னாள் எம்.பி., முனியப்பா. கடந்த லோக்சபா தேர்தலில் தோற்று, தொகுதியை பா.ஜ.,விடம் பறிகொடுத்தார். அதன் பின் சட்டசபை தேர்தலில், பெங்களூரு ரூரல், தேவனஹள்ளி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது முதல்வர் சித்தராமையா அமைச்சரவையில், உணவுத்துறை அமைச்சராக பதவி வகிக்கிறார்.
இம்முறை லோக்சபா தேர்தலில், கோலார் தொகுதி வேட்பாளராக ஆர்வம் காண்பிக்கிறார். தொண்டர்களும், ஆதரவாளர்களும், அவருக்கு சீட் தரும்படி, மேலிடத்துக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். சமீபத்தில் தொண்டர்கள் குழுவினர், முனியப்பாவை நேரில் சந்தித்தனர்.
அப்போது அவர்கள், 'கோலார் தொகுதியில் வேட்பாளர் விஷயத்தில் தேவையற்ற குழப்பம் ஏற்படுகிறது. பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணியை எதிர்க்கொள்ள, நீங்களே சரியானவர். எனவே நீங்களே காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுங்கள்' என ஆலோசனை கூறியுள்ளனர்.
முனியப்பா மருமகன்
இதற்கிடையில் முனியப்பாவின் மருமகனும், அரசு ஊழியருமான சிக்க பெத்தண்ணாவை, அரசியலுக்கு அழைத்து வர முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது. சிக்கபல்லாபூர், சிந்தாமணியின், கோடிகல் கிராமத்தை சேர்ந்த சிக்க பெத்தண்ணா, முனியப்பாவின் இளைய மகள் நந்தினியின் கணவர் ஆவார்.
இவருக்கு சீட் கொடுத்தால், முனியப்பா மற்றும் முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் இடையே, பல காலமாக இருந்து வரும் பனிப்போருக்கு தீர்வு கிடைக்கும் என, கூறப்படுகிறது.
அதிகாரப்பூர்வமாக அரசியலில் இல்லையென்றாலும், சமூக சேவை வாயிலாக சிக்க பெத்தண்ணா அடையாளம் காணப்பட்டவர். சிந்தாமணியை சேர்ந்தவர் என்பதால், கோலாரை பற்றி நன்கு அறிந்தவர். 'இவருக்கு சீட் தாருங்கள். அவரை நாங்கள் வெற்றி பெற வைப்போம்' என, சில தலைவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
ஆனால் இதற்கு முனியப்பா கோஷ்டி, முட்டுக்கட்டை போடுகிறது. இவரே போட்டியிட வேண்டும். அவரது மருமகனுக்கு சீட் கொடுக்க கூடாது என, முரண்டு பிடிக்கின்றனர். கோலார் லோக்சபா தொகுதி சீட் விஷயத்தில், மாமனார், மருமகனுக்கு இடையே, இழுபறி ஏற்படும் அறிகுறிகள் தென்படுகின்றன. சீட் பெறுவதில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதை, பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
- நமது நிருபர் -