சகோதரர் - சகோதரியை தாக்கிய கும்பல் 7 பேர் கைது; 9 பேருக்கு போலீசார் வலை
சகோதரர் - சகோதரியை தாக்கிய கும்பல் 7 பேர் கைது; 9 பேருக்கு போலீசார் வலை
சகோதரர் - சகோதரியை தாக்கிய கும்பல் 7 பேர் கைது; 9 பேருக்கு போலீசார் வலை
ADDED : ஜன 08, 2024 06:51 AM

பெலகாவி: காதலர்கள் என நினைத்து, சகோதரர் - சகோதரியை தாக்கியவர்களில் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள ஒன்பது பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெலகாவி மாவட்டம், யமனாபுரா கிராமத்தை சேர்ந்தவர்கள் சச்சின் லமானி, 22, முஸ்கன் படேல், 23. இருவரும் உறவு முறையில் சகோதர - சகோதரியாவர். பட்டதாரிகளான இருவரும், நேற்று முன்தினம், 'யுவ நிதி' திட்டத்திற்கு விண்ணப்பிக்க சென்றனர்.
சர்வர் பிரச்னையால் காலதாமதமானது. அருகில் உள்ள கோட்டேகெரே பூங்காவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அப்பெண், வெயிலில் இருந்து தப்பிக்க தலை, முகத்தை மறைத்தபடி துப்பட்டா அணிந்திருந்தார்.
இதை பார்த்த அங்கிருந்த 16 பேர் கொண்ட கும்பல், இருவர் அருகில் வந்தனர். 'நீங்கள் யார். முஸ்லிம் பெண்ணான நீ, ஹிந்து வாலிபருடன் ஏன் அமர்ந்திருக்கிறாய்' என்று கேட்டனர். அதற்கு இருவரும், நாங்கள் இருவரும் சகோதர - சகோதரி என்று கூறியும் அவர்கள் கேட்கவில்லை.
இருவரையும் அருகில் இருந்த மறைவான இடத்துக்கு அழைத்து சென்று, மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் இளைஞரை தாக்கி உள்ளனர். அப்போது அப்பெண், தன் குடும்பத்தினருக்கு போன் செய்து விஷயத்தை கூறினர். அவரின் பெற்றோரும், அவர்கள் இருவரும் ஹிந்து தான் என கூறியும், கும்பல் கேட்கவில்லை.
இது தொடர்பாக, இளம்பெண்ணின் பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர். மொபைல் போன் டவரை சிக்னலை வைத்து, போலீசார் அங்கு சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும், கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இருவர் மட்டும் சிக்கினர்.
படுகாயமடைந்த இளைஞரும், இளம் பெண்ணும் மாவட்ட மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். சிக்கிய இருவரிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து, மேலும் ஆறு பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முஸ்கன் பட்டேலை, நேற்று பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
கர்நாடகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கின்றன. ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே கலவரத்தை ஏற்படுத்தி, தேர்தலை சந்திக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
இளைஞரை இரும்பு கம்பியால் தாக்கி உள்ளனர். இது குறித்து விசாரணை நடத்த முதல்வர், உள்துறை அமைச்சர் ஆகியோர் விசாரணை குழுவை பெலகாவிக்கு அனுப்ப வேண்டும்.
இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்று, இதுவரை, 70 முதல் 80 பேரை அவர்கள் தாக்கி உள்ளனர். அதற்காகவே, இங்கு கொட்டகை அமைத்துள்ளனர். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க அரசு கவனமாக இருக்க வேண்டும்.
தாக்கப்பட்ட இளைஞருக்கு, 2.5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக, சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இருவருக்கும் அனைத்து வசதிகளையும் அரசு செய்து தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.