ஐ.பி.எல்., போர்வையில் சூதாட்டம் நடக்கிறது; சட்டம் இயற்றுவதால் மக்களை தடுக்க முடியாது
ஐ.பி.எல்., போர்வையில் சூதாட்டம் நடக்கிறது; சட்டம் இயற்றுவதால் மக்களை தடுக்க முடியாது
ஐ.பி.எல்., போர்வையில் சூதாட்டம் நடக்கிறது; சட்டம் இயற்றுவதால் மக்களை தடுக்க முடியாது
ADDED : மே 24, 2025 12:29 AM

புதுடில்லி: 'ஐ.பி.எல்., என்ற போர்வையில் சூதாட்டத்தில் மக்கள் ஈடுபடுகின்றனர். சட்டம் இயற்றுவதால், இதை தடுக்க முடியாது' எனக் கூறிய உச்ச நீதிமன்றம், சூதாட்ட செயலிகளை ஒழுங்குபடுத்த கோரும் பொதுநல மனு மீது பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில், ஆன்லைன் சூதாட்ட செயலிகள் மற்றும் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்கு விசாரணையும் நடக்கிறது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் கே.ஏ.பால் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு:
ஆன்லைன் சூதாட்ட செயலிகள் மற்றும் விளையாட்டுகள் தொடர்பான விளம்பரங்களில், சமூக ஊடகங்களில் பிரபலமாக உள்ள நபர்கள், நடிகர்கள் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இவர்களை நம்பி, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பணத்தை முதலீடு செய்து இழக்கின்றனர்.
தற்போது நடக்கும் ஐ.பி.எல்., எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரிலும் கூட, சூதாட்ட செயலிகளை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் விளம்பரப்படுத்தினர்.
சூதாட்ட செயலிகள் மற்றும் விளையாட்டுகளால், தெலுங்கானாவில் மட்டும் 1,000க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துள்ளனர்.
பல்வேறு மாநிலங்களிலும் இதே நிலை தான் உள்ளது. சூதாட்ட செயலிகள் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பொதுநல மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
ஐ.பி.எல்., என்ற பெயரில் ஏராளமானோர் சூதாட்டத்திலும், 'பெட்டிங்'கிலும் ஈடுபடுகின்றனர். இது ஒரு மிகவும் தீவிரமான பிரச்னை.
'டிவி'யில் பெற்றோர் ஒரு நிகழ்ச்சியை பார்த்தால், மொபைல் போனில் வேறொரு நிகழ்ச்சியை குழந்தைகள் பார்க்கின்றனர். இது முற்றிலும் சமூக விலகல்.
மக்கள் தாமாக முன்வந்து சூதாட்டத்தில் ஈடுபடும் போது, நாம் என்ன செய்ய முடியும்? அதை நிறுத்த வேண்டும் என்பதில் நாங்களும் உறுதியோடு இருக்கிறோம். ஆனால், ஒரு சட்டத்தின் வாயிலாக அதை நிறுத்த முடியாது.
கொலை செய்வதை நாம் தடுக்க முடியாதது போல, சூதாட்டத்தில் மக்கள் ஈடுபடுவதை ஒரு சட்டத்தால் தடுக்க முடியாது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது?
இது குறித்து மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இதில் தேவைப்பட்டால், மாநில அரசுகளிடம் இருந்தும் பதிலை பெறுவோம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.