புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் மாநிலங்களுக்கான நிதியை நிறுத்தக் கூடாது: பார்லி., குழு பரிந்துரை
புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் மாநிலங்களுக்கான நிதியை நிறுத்தக் கூடாது: பார்லி., குழு பரிந்துரை
புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் மாநிலங்களுக்கான நிதியை நிறுத்தக் கூடாது: பார்லி., குழு பரிந்துரை
ADDED : மார் 27, 2025 07:01 AM

புதுடில்லி : 'புதிய கல்விக் கொள்கை ஏற்காத, 'பிஎம் ஸ்ரீ' பள்ளி திட்டத்தை செயல்படுத்தாத, மாநிலங்களுக்கான நிதி நிறுத்தப்படுவதை ஏற்க முடியாது. உடனடியாக தமிழகம், கேரளா, மேற்கு வங்கத்துக்கான நிறுத்தி வைக்கப்பட்ட நிதியை விடுவிக்க வேண்டும்' என, பார்லிமென்ட் நிலைக்குழு கூறியுள்ளது.
மத்திய அரசின் புதியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தும் வகையில், பிஎம் ஸ்ரீ பள்ளி எனப்படும் மாதிரி பள்ளிகளை உருவாக்குவது தொடர்பாக மாநிலங்களுடன் ஒப்பந்தம் செய்யப்படுகிறது. இது ஹிந்தியை திணிப்பதாகக் கூறி, அதை செயல்படுத்த தமிழக அரசு மறுத்து வருகிறது.
இதற்கிடையே, சமக்ர சிக் ஷா திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய, 2,152 கோடி ரூபாயை நிலுவையில் வைத்துள்ளதாக தமிழக அரசு குற்றஞ்சாட்டியது.பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைந்தால் மட்டுமே, இந்த நிதி வழங்கப்படும் என, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதான் கூறினார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, கேரளா, மேற்கு வங்க மாநிலங்களுக்கும், சமக்ர சிக் ஷா திட்டத்தின் கீழ் நிதியை விடுவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தலைமையிலான, கல்வி, குழந்தைகள், பெண்கள், இளைஞர் நலன், விளையாட்டு ஆகிய துறைகளுக்கான பார்லிமென்ட் நிலைக்குழுவின் அறிக்கை, ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பிஎம் ஸ்ரீ பள்ளிகள் என்பது, புதிய கல்விக் கொள்கையின் கீழ் அமைக்கப்படும் மாதிரி பள்ளிகள். சமக்ர சிக் ஷா திட்டம் என்பது, புதிய கல்விக் கொள்கை இலக்கை எட்டுவதற்கான திட்டம். அதனால், பிஎம் ஸ்ரீ பள்ளிகள் அமைப்பதற்கான ஒப்பந்தம் செய்யாத நிலையில், சமக்ர சிக் ஷா திட்டத்தின் கீழ் நிதியை ஒதுக்க இயலாது என, கல்வித் துறை கூறியுள்ளது.
ஆனால், இது உண்மையல்ல; ஏற்கக் கூடியதும் அல்ல. சமக்ர சிக் ஷா என்பது, பிஎம் ஸ்ரீ திட்டத்துக்கு முன்பாகவே, பார்லிமென்டால் இயற்றப்பட்ட கல்வி உரிமைச் சட்டத்தின் இலக்குகளை எட்டுவதற்கான திட்டமாகும். அதனால், அந்த திட்டத்தையும், பிஎம் ஸ்ரீ திட்டத்தையும் சேர்த்து பார்க்க முடியாது. சமக்ர சிக் ஷா என்பது கல்வி உரிமையை நிலைநாட்டுவதற்கான திட்டம்.
தற்போதைய நிலையில், 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 33 உடன் பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்துக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தேசிய அளவில் ஒரே சீரான கல்வி முறை, மாணவர் திறனை சோதிக்கும் முறையை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த பள்ளிகள் திறக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், புதிய கல்விக் கொள்கை, பிஎம் ஸ்ரீ திட்டத்தில் சேராததால், தமிழகம், கேரளா, மேற்கு வங்கத்துக்கான, சமக்ர சிக் ஷா திட்ட நிதியை விடுவிக்காமல் இருப்பதை ஏற்க முடியாது. இந்த திட்டத்தின் கீழ், கேரளாவுக்கு, 1,000 கோடி ரூபாய், மேற்கு வங்கத்துக்கு, 859.63 கோடி ரூபாய், தமிழகத்துக்கு, 2,152 கோடி ரூபாய் நிலுவை உள்ளது.
இந்த மூன்று மாநிலங்களும், தேசிய அளவிலான மாணவர் சேர்க்கை விகிதம், கல்வி தரம் ஆகியவற்றில் மிகவும் வலுவாகவே உள்ளன. அதனால், இந்த நிதியை ஒதுக்காததால், கல்வி கட்டமைப்புகளை மேம்படுத்துவது, ஆசிரியர் பயிற்சி, மாணவர்களுக்கான ஆதரவு ஆகியவற்றை செயல்படுத்த முடியாமல் இந்த மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தங்களுடைய சொந்த நிதியைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன.
நடப்பு, 2024 - 25 நிதியாண்டில், எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ், தமிழக அரசு, 3,586 கோடி ரூபாயை ஒதுக்கிவிட்டது. தமிழக அரசுக்கு, 2,152 கோடி ரூபாய் மத்திய அரசு தராமல் இழுத்தடிப்பு செய்கிறது. இது கல்வி உரிமையை நிலைநாட்டுவதில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதனால், இந்த விவகாரத்தில் மாநிலங்களுடன் பேசி, பிரச்னைகளுக்கு தீர்வு காண முயல வேண்டும். சமக்ர சிக் ஷா திட்டத்தின் கீழ் நிலுவையில் வைத்துள்ள தொகைகளை உடனடியாக மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.