ADDED : ஜன 11, 2024 11:27 PM

பீதர்: விவசாய நிலத்திற்கு செல்லும் வழியில், தடுப்பு வேலி அமைத்ததை கேள்வி கேட்ட, கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
பீதர், சிட்டகுப்பா நிரணா கிராமத்தில் வசித்தவர் மல்லிகார்ஜுன், 46. இவர் நிரணா கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஆவார். நேற்று காலை மல்லிகார்ஜுனும், அவரது மகனும் விவசாய நிலத்திற்கு பைக்கில் சென்றனர்.
தங்கள் நிலத்திற்கு செல்லும் வழியில், தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருந்ததை பார்த்தனர். இதுகுறித்து, அங்கு தடுப்பு வேலி அமைத்த லிங்கராஜ், அவரது உறவினர்கள் என ஒன்பது பேரிடம், மல்லிகார்ஜுன் கேள்வி எழுப்பினார்.
இதனால், ஆத்திரம் அடைந்த ஒன்பது பேரும் சேர்ந்து, மல்லிகார்ஜுனையும், அவரது மகனையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர்.
பலத்த வெட்டு காயம் அடைந்த, மல்லிகார்ஜுன் சம்பவ இடத்திலேயே இறந்தார். உயிருக்கு போராடிய அவரது மகன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
போலீசார் நடத்திய விசாரணையில், தடுப்பு வேலி அமைத்தது பற்றி கேள்வி எழுப்பியதாலும், முன்விரோதத்திலும் கொலை நடந்தது தெரிந்தது. லிங்கராஜ் உட்பட நான்கு பேரை, மண்ணாலி போலீசார் கைது செய்தனர்.