அய்யப்பனை தரிசித்த கர்நாடகாவின் முதல் திருநங்கை
அய்யப்பனை தரிசித்த கர்நாடகாவின் முதல் திருநங்கை
அய்யப்பனை தரிசித்த கர்நாடகாவின் முதல் திருநங்கை
ADDED : ஜன 11, 2024 03:45 AM

பெங்களூரு: கேரளா வரலாற்றில், முதன் முறையாக, திருநங்கையர் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று, சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இதில், கர்நாடகாவை சேர்ந்தவரும் ஒருவர்.
பொதுவாக, 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள், சபரிமலை அய்யப்ப சுவாமி கோவிலுக்கு செல்லக்கூடாது என்பது ஐதீகம். பல போராட்டங்களுக்கு பின், 2019ல் சபரிமலைக்கு பெண்கள் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
ஆனால், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்தன. இதனால், சபரிமலைக்கு பெண்கள் யாரும் செல்வது இல்லை. மீறி சென்றாலும், அங்கிருக்கும் போலீசார் அனுமதிப்பது இல்லை.
முதல் முறை
இந்நிலையில், கேரள வரலாற்றில் முதன் முறையாக, திருநங்கையர் சபரிமலை கோவிலுக்கு சென்றுள்ளனர். கர்நாடகாவை சேர்ந்த ரியானா ராஜு, 35 என்பவர், பல ஆண்டுகளுக்கு முன் ஆணாக இருந்து, பெண்ணாக மாறினார்.
விண்ணப்பம்
இவருக்கு சபரிமலைக்கு சென்று, அய்யப்ப சுவாமியை தரிசிக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. கேரள அரசின் தேவஸ்தானம் போர்டு இணையதளம் வழியாக, தொடர்ந்து எட்டு முறை விண்ணப்பித்தார். இம்முறை அனுமதி கிடைத்தது. ரியானா ராஜு சபரிமலைக்கு சென்று தரிசனம் செய்தார்.
இது குறித்து, அவர் கூறியதாவது:
நானும் பைஜாமா, வேட்டி அணிந்து ஆண்களை போன்று, சபரிமலைக்கு சென்றிருக்கலாம். ஆனால், நான் பெண்ணாக அடையாளம் காணப்படுகிறேன்.
மகளிர், குழந்தைகள் நலத்துறை, துணை முதல்வர் அலுவலகத்தில் பெறப்பட்ட கடிதம், திருநங்கையர் உரிமைகளை அடையாளம் காணும் தேசிய சட்ட ஆணைய சிபாரிசுகள் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்துள்ளேன்.
அனுமதி
நான் சபரிமலைக்கு பெண்களை போன்று உடையணிந்து சென்றது குறித்து, சில பக்தர்களும், புரோஹிதர்களும் விசாரித்தனர். அவர்களிடம், 'நான் திருநங்கை. எனக்கு மாதவிலக்கு வராது. எனவே, அய்யப்பனை தரிசிக்கலாம்' என, விளக்கம் தந்தேன்.
என்னுடன் ஐந்து திருநங்கையர் வந்திருந்தனர். அவர்கள் ஆண்களை போன்று உடை அணிந்திருந்தனர். ஆனால் நான் சேலையணிந்து திருநங்கையாகவே, அய்யப்பனை தரிசனம் செய்து, என் கனவை நிறைவேற்றிக் கொண்டேன். நாங்கள் அய்யப்பனை தரிசிக்க உதவிய போலீசாருக்கும், கோவில் நிர்வாகத்தினருக்கும் என் நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.