முதல் திருநங்கை கவுன்சிலர் ஆம் ஆத்மியில் இருந்து விலகல்
முதல் திருநங்கை கவுன்சிலர் ஆம் ஆத்மியில் இருந்து விலகல்
முதல் திருநங்கை கவுன்சிலர் ஆம் ஆத்மியில் இருந்து விலகல்
ADDED : மே 21, 2025 03:25 AM
புதுடில்லி:டில்லி மாநகராட்சியின், முதல் திருநங்கை கவுன்சிலர் பாபி கின்னார், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகி, இந்திர பிரஸ்தா விகாஸ் கட்சியில் இணைந்தார்.
டில்லி மாநகராட்சிக்கு 2022ம் ஆண்டு நடந்த தேர்தலில், திருநங்கை பாபி கின்னார், சுல்தான்பூர் 43வது வார்டில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மாநகராட்சியின் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் 15 பேர், அக்கட்சியின் மூத்த கவுன்சிலர் முகேஷ் தலைமையில், 17ம் தேதி அக்கட்சியில் இருந்து விலகி, இந்திரபிரஸ்தா விகாஸ் என்ற கட்சியைத் துவக்கினர்.
இந்நிலையில், முதல் திருநங்கை கவுன்சிலர் என்ற பெருமையை பெற்ற பாபி கின்னார், ஆம் ஆத்மியில் இருந்து நேற்று விலகி, இந்திர பிரஸ்தா விகாஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இதுகுறித்து, பாபி கின்னார் கூறியதாவது:
என் வார்டில் எந்த வளர்ச்சிப் பணிகளும் செய்யப்படவில்லை. இதனால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மக்களுக்காக உழைக்க விரும்புவதால், ஆம் ஆத்மியை விட்டு வெளியேறினேன்.
மாநகராட்சியில் எங்களுக்கு பேசக்கூட வாய்ப்பு இல்லை. பிரச்னைகளை எழுப்ப எந்த தளமும் இல்லை. சபை சரியாக நடக்கவில்லை என்றால் வளர்ச்சிப் பணிகளை எப்படி செய்ய முடியும்?
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திர பிரஸ்தா விகாஸ் கட்சியின் மூத்த தலைவர் முகேஷ் கோயல், “மன உறுதியுடன் மக்கள் சேவை செய்யவே இந்த புதிய கட்சியை துவக்கியுள்ளோம். பொது நலனுக்காகப் பணியாற்றுவதே எங்கள் நோக்கம். டில்லி மாநகராட்சி வளர்ச்சிப் பணியில் மட்டுமே கவனம் செலுத்துவோம். மாநில அரசியலில் எங்களுக்கு விருப்பம் இல்லை,”என்றார்.