பிப். 8ல் முதல்வரின் மக்கள் குறைதீர்ப்பு நிகழ்ச்சி
பிப். 8ல் முதல்வரின் மக்கள் குறைதீர்ப்பு நிகழ்ச்சி
பிப். 8ல் முதல்வரின் மக்கள் குறைதீர்ப்பு நிகழ்ச்சி
ADDED : ஜன 25, 2024 04:48 AM
பெங்களூரு : முதல்வர் சித்தராமையா, பிப்ரவரி 8ல் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து, அதே இடத்தில் தீர்வு காண்கிறார்.
முதல்வரின் மக்கள் குறைதீர்ப்பு நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் குறித்து, முதல்வரின் செயலர் அதீக், உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
முதல்வரின் செயலர் அதீக் கூறியதாவது:
மக்கள் குறைதீர்ப்பு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த வேண்டும். இது முதல்வர் நடத்தும், இரண்டாவது மக்கள் குறைதீர்ப்பு நிகழ்ச்சியாகும். அனைத்துத் துறை செயலர்கள், துறை முக்கியஸ்தர்கள் உடனிருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது நிகழ்ச்சிக்கு வரும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்படும்.
குடிநீர், சிற்றுண்டி, உணவு வசதி செய்ய வேண்டும். கடந்த முறை பெறப்பட்ட மனுக்களை விரைந்து கவனிப்பது குறித்து, அனைத்து துறைகளுக்கும் கடிதம் எழுதுவேன். முதல்வரை சந்திக்க வரும் மக்களின் வசதிக்காக, மெஜஸ்டிக் பஸ் நிலையம், ரயில் நிலையத்துக்கு இலவச பஸ் வசதி செய்ய வேண்டும்.
வெவ்வேறு துறைகளின் மனுக்களை பெற, தனித்தனி கவுன்டர்கள் அமைத்து, அதற்கு தேவையான உபகரணங்களை வழங்க வேண்டும். இ நிர்வாகத்துறை ஊழியர்களை நியமிக்க வேண்டும். மக்களின் புகார்களை ஆய்வு செய்து, நிர்ணயித்த கவுன்டர்களுக்கு செல்ல வழி காண்பிக்க, நுழை வாசல் அருகில் அதிகாரிகள், ஊழியர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும்.
அன்றைய தினம் விதான்சவுதாவில், போதிய பாதுகாப்பு வசதிகள் செய்ய வேண்டும். போக்குவரத்து நிர்வகிப்பில் எந்த பிரச்னையும், ஏற்பட கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.