காவியமா... நெஞ்சில் ஓவியமா! 20 வயதிலேயே சாதிக்கும் இளம் பெண்
காவியமா... நெஞ்சில் ஓவியமா! 20 வயதிலேயே சாதிக்கும் இளம் பெண்
காவியமா... நெஞ்சில் ஓவியமா! 20 வயதிலேயே சாதிக்கும் இளம் பெண்
ADDED : பிப் 10, 2024 11:55 PM

அனைத்து மனிதர்களுக்குள்ளும், ஏதாவது ஒரு திறமை மறைந்திருக்கும். இதை சிலர் மட்டுமே, வெளியே கொண்டு வந்து ஜொலிக்கின்றனர். இவர்களில் ஒருவர் சஹானா. இவர் ஓவியக்கலையில் கைதேர்ந்தவர். இவர் வரையும் ஓவியங்கள் பிரமிக்க வைக்கின்றன.
மைசூரின் பிஎம்ஸ்ரீ நகரில் வசிக்கும் ஸ்ரீராமின் மகள் சஹானா, 20. அற்புதமான ஓவிய கலைஞர். தன் ஐந்தாம் வயதில் இருந்தே, ஓவியம் வரைய ஆரம்பித்தார். அப்போது துவங்கிய கலை, இப்போது தொழிலாகவே மாறிவிட்டது.
தன் மகளுக்குள் ஒளிந்துள்ள ஓவியத்திறமையை, சிறு வயதிலேயே தெரிந்து கொண்ட தந்தை, சஹானா பத்தாம் வகுப்பு முடித்தவுடன், ஓவிய பல்கலைக்கழகத்தில் சேர்த்து, ஓவியத்தை முறைப்படி கற்க செய்தார். தலை சிறந்த ஓவியராக உருவானதில், தந்தையின் பங்களிப்பு அதிகம்.
மைசூரு அரண்மனையின், ஸ்வேத வராஹ சுவாமி கோவில் சுவர்களில், ஓவியங்கள் வரையப்பட்டதில் சஹானாவின் பங்களிப்பு அதிகம். இதுவரை ஆயிரக்கணக்கான ஓவியங்களை வரைந்துள்ளார். முருகன் சிவன், துமகூரு சித்தகங்கா மடத்தின் சிவகுமார சுவாமிகள், பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல தலைவர்கள், கடவுள் உருவத்தை தத்ரூபமாக வரைந்துள்ளார். இவர் வரையாத ஓவியங்களே இல்லை.
ஓவியம் வரைவது மட்டுமின்றி, 'டாட்டூ' போடும் கலையிலும் சிறந்து விளங்குகிறார். தன் கையால் வரையப்பட்ட பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படத்தை, அவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது, அவரது நீண்ட நாள் கனவு. ஓவிய கலையில், மேலும் பல சாதனைகளை செய்ய விரும்புகிறார்.
சஹானாவின் ஓவிய திறமைக்கு, அவரது தந்தை ஸ்ரீராம் ஊக்கமளிக்கிறார்.
பொதுவாக பெண் குழந்தைகள் என்றால், முகத்தை சுளிப்பவர்களே அதிகம். இவர்களுக்கு முன் மாதிரி தந்தையாக விளங்குகிறார்.
- நமது நிருபர் -