ஜார்க்கண்ட் முதல்வரின் ஆலோசகர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
ஜார்க்கண்ட் முதல்வரின் ஆலோசகர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
ஜார்க்கண்ட் முதல்வரின் ஆலோசகர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
ADDED : ஜன 04, 2024 01:29 AM
ராஞ்சி, ஜார்க்கண்டில், சட்ட விரோத சுரங்கத் தொழிலில் நடந்த பண மோசடி வழக்கு தொடர்பாக, அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் ஊடக ஆலோசகர் அபிஷேக் பிரசாத், முன்னாள் எம்.எல்.ஏ., பப்பு யாதவ் உள்ளிட்டோரின் வீடுகளில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, சட்ட விரோதமாக சுரங்கத் தொழில் நடந்துள்ள தாக, முதல்வர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் மீது, சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
விசாரணைக்கு ஆஜராகும்படி பல முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.
இது தொடர்பாக, 2022 ஜூலையில், முதல்வர் ஹேமந்த் சோரனின் அரசியல் உதவியாளர் பங்கஜ் முஸ்ரா மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை தொடர்பாக, ராஞ்சியில் உள்ள முதல்வர் ஹேமந்த் சோரனின் ஊடக ஆலோசகர் அபிஷேக் பிரசாத் வீட்டில், அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
இதே போல், முன்னாள் எம்.எல்.ஏ., பப்பு யாதவ் மற்றும் சிறைத் துறை அதிகாரிகள் சிலரது வீடுகளிலும் சோதனை நடந்தது.
இந்த சோதனைகளின் போது, பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.