லட்சுமி வெங்கடரமணா கோவிலில் உடை கட்டுப்பாடு
லட்சுமி வெங்கடரமணா கோவிலில் உடை கட்டுப்பாடு
லட்சுமி வெங்கடரமணா கோவிலில் உடை கட்டுப்பாடு
ADDED : ஜன 11, 2024 03:46 AM
பெங்களூரு: பெங்களூரின் பிரசித்தி பெற்ற, லட்சுமி வெங்கடரமணா கோவிலில் உடை கட்டுப்பாடு விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
கோவில்களுக்கு வரும் இளைஞர்கள், இளம்பெண்கள் மனம் போனபடி உடையணிந்து வருகின்றனர். இளம்பெண்கள் அரைகுறை உடையணிந்து வருகின்றனர். இது பக்தர்களின் மனதை புண்படுத்துகிறது. கோவிலின் புனிதம் கெடுகிறது.
'அனைத்து கோவில்களிலும் உடை கட்டுப்பாடு விதிமுறை கொண்டு வர வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள், ஆன்மிகவாதிகள் நீண்ட காலமாக வலியுறுத்துகின்றனர்.
இது குறித்து, ஹிந்து அறநிலையத்துறை அதிகாரப்பூர்வமாக உத்தரவு பிறப்பிக்கவில்லை. ஆனால் சில கோவில்களில், உடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இந்திய கலாசாரப்படி உடையணிந்து வர அறிவுறுத்தியுள்ளன. இல்லையென்றால் கோவிலுக்குள் அனுமதிப்பது இல்லை.
பெங்களூரு, வசந்தநகரில் உள்ள பிரசித்தி பெற்ற லட்சுமி வெங்கடரமணா கோவிலில், பக்தர்களுக்கு உடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 11:00 மணிக்கு இது குறித்து, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
அதில், 'கோவிலில் உடை கட்டுப்பாடு விதிமுறையை கடைபிடிக்க வேண்டும். ஆண்கள் டி ஷர்ட், பர்முடா, கிழிந்த ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாது.
அதே போன்று பெண்கள் ஸ்கர்ட், மிடி, கிழிந்த ஜீன்ஸ், ஷார்ட்ஸ் அணிந்து வந்தால், கோவிலில் அனுமதியில்லை.
'இந்திய கலாசாரப்படி உடையணிந்து வந்தால் மட்டுமே, கோவிலில் நுழைய அனுமதி கிடைக்கும். இல்லையென்றால் உள்ளே நுழைய அனுமதி இல்லை' என கூறப்பட்டுள்ளது.