டிஜிட்டல் பரிவர்த்தனையால் செலவுகள் அதிகரிப்பு!: தேவையில்லாதவை வாங்குவதாக தகவல்
டிஜிட்டல் பரிவர்த்தனையால் செலவுகள் அதிகரிப்பு!: தேவையில்லாதவை வாங்குவதாக தகவல்
டிஜிட்டல் பரிவர்த்தனையால் செலவுகள் அதிகரிப்பு!: தேவையில்லாதவை வாங்குவதாக தகவல்
ADDED : ஜூன் 29, 2024 11:37 PM

வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில், ரொக்கமில்லா டிஜிட்டல் பரிவர்த்தனையை பயன்படுத்துவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், இதனால் தேவையில்லாத ஆடம்பர பொருட்களை வாங்கிக் குவிப்பதும் அதிகரித்துள்ளது என, ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
புதுடில்லி: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அடிலெய்டு பல்கலை மற்றும் மெல்போர்ன் பல்கலை இணைந்து, ஒரு பெரிய ஆய்வை நடத்தியுள்ளன.
வளரும் மற்றும் வளர்ந்த 17 நாடுகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பான 71 ஆய்வுகளை தொகுத்து, மக்களின் செலவிடும் பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாக இந்த பிரமாண்ட ஆய்வு நடத்தப்பட்டது.
மிகவும் சுலபம்
இந்த ஆய்வு முடிவுகள், 'சயின்ஸ் அலெர்ட்' என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன. ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வதை, பெரும்பாலானோர் மிகவும் பாதுகாப்பானதாக கருதுகின்றனர். மேலும், அது மிகவும் சுலபமாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.
வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் ரொக்கமில்லா டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வது மிகவும் சாதாரணமாகி விட்டது. இதனால், மக்களின் செலவிடும் பழக்கத்திலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மிகவும் சுலபமானதாக இருப்பதால், மக்கள் இஷ்டத்துக்கு செலவிடுவது அதிகரித்துள்ளது. இதனால், தேவையில்லாத பல ஆடம்பர பொருட்களை வாங்கி குவிக்கின்றனர்.
ரொக்கமாக செலவிடும்போது, பணத்தை நாம் எண்ணிக் கொடுக்கிறோம். அப்போது, மீதம் எவ்வளவு இருக்கும் என்பதையும் கவனிப்போம். இதனால், தேவையில்லாதவற்றை வாங்குவதை தவிர்க்க முடியும்.
ரொக்கமில்லா பண பரிவர்த்தனை நீண்டகாலமாக புழக்கத்தில் உள்ளது. ஆனால், முதல் முறையாக மக்கள் செலவிடும் முறையில் ஏற்பட்டுள்ள பழக்க மாற்றம் குறித்து ஆய்வு செய்துள்ளோம்.
நன்கொடை
இவ்வாறு அதிகமாக செலவிடுவது, தனிநபர் அளவில் சிறிதாக இருந்தாலும், அது ஒட்டுமொத்தமாக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
செலவு செய்வதில் மக்களிடையேயான சுயக்கட்டுப்பாடு குறைந்து வருகிறது. அதனால் விலையுயர்ந்த ஆடைகள், நகைகள் என, பலவற்றையும் வாங்கி குவிக்கின்றனர்.
டிஜிட்டல் முறையில் அதிகளவு டிப்ஸ் அல்லது நன்கொடைகளை மக்கள் கொடுக்கின்றனர்.
ரொக்கமில்லா பரிவர்த்தனைகளால் பொருளாதாரத்திலும் பெரிய தாக்கத்தை, மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.
அதுபோல நிறுவனங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கைகளிலும் பாதிப்பு ஏற்படவில்லை.
ரொக்கமில்லா டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுவது என்பதை தவிர்க்க முடியாது. அதே நேரத்தில், இது மக்களின் செலவிடும் முறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை உணர்ந்து, சுயக்கட்டுப்பாடுடன் செலவிடுவது முக்கியம் என்பது தெரியவந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.