தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்க வேண்டும்; தி.மு.க., - எம்.பி.,க்கள் ஆவேசம்
தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்க வேண்டும்; தி.மு.க., - எம்.பி.,க்கள் ஆவேசம்
தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்க வேண்டும்; தி.மு.க., - எம்.பி.,க்கள் ஆவேசம்
ADDED : மார் 12, 2025 04:58 AM

'மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தன் பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்' என வலியுறுத்தி, பார்லிமென்டில் தி.மு.க., - எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
ராஜ்யசபாவில் நேற்று அலுவல்கள் துவங்கியதும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விவகாரத்தை, தி.மு.க., - எம்.பி.,க்கள் கிளப்பினர். அவரை டிஸ்மிஸ் செய்யும்படி குரல் எழுப்பினர். தொகுதி மறு சீரமைப்பு விவகாரம், ஒரே எண் கொண்ட வாக்காளர் அடையாள அட்டை விவகாரம் குறித்து, சபையை அலுவல்களை ரத்து செய்துவிட்டு விவாதம் நடத்த வலியுறுத்தி, தி.மு.க., காங்., திரிணமுல் கட்சிகளின் எம்.பி.,க்கள் நோட்டீஸ் அளித்திருந்தனர்.
இந்த நோட்டீஸ்கள் அனைத்தும் நிராகரிக்கப்படுவதாக, ராஜ்யசபா துணை தவைவர் ரகுவன்ஷ் நாராயன்சிங் கூறவே, சபை பரபரப்பானது. அப்போது, தி.மு.க., - எம்.பி., கிரிராஜன் பேசியதாவது:
குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை தமிழகம், கேரளா, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் மிக சிறப்பாக அமல்படுத்தின. இதே திட்டத்தை, உ.பி., பீஹார் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் சரியாக அமல்படுத்தவில்லை என்பதால், அம்மாநிலங்களில் மக்கள் தொகை பெருக்கம் அதிகமாக உள்ளது.
மக்கள் தொகை அடிப்படையில் தற்போது லோக்சபா தொகுதிகளை மாற்றம் செய்தால், குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை சரியாக அமல்படுத்தாத மாநிலங்களுக்கு கூடுதல் தொகுதிகள் கிடைத்துவிடும். இவ்வாறு செய்வது நம் ஜனநாயகத்தின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. இது மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயலாற்றிய மாநிலங்களுக்கு தண்டனை அளித்தது போல் ஆகிவிடும். அதனால் மத்திய அரசு நடவடிக்கை தவறானது.
எந்தவகையிலும் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைப்பதை ஏற்கவே முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
அவர் பேசும்வரை அமைதிகாத்த தி.மு.க., - எம்.பி.,க்கள், பின் ஆவேசமாக குரல் எழுப்பத் துவங்கினர். 'தமிழ் மக்களை நாகரிமற்றவர் என கூறிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்க வேண்டும். அவரை அமைச்சர் பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும்' என்று கோஷங்கள் போட்டனர்.
-- நமது டில்லி நிருபர் -