டால்பின்களை கண்டு ரசிக்க தேவ்காட் தீவு
டால்பின்களை கண்டு ரசிக்க தேவ்காட் தீவு
டால்பின்களை கண்டு ரசிக்க தேவ்காட் தீவு
ADDED : ஜன 25, 2024 04:26 AM

வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக் கிழமை குடும்பத்துடன் எங்கேயாவது சுற்றுலா சென்று வரலாம் என்று அனைவரும் நினைப்பர். இதற்காக சுற்றுலா தலங்களை தேர்வு செய்வர். ஒரே ஊரில் பார்ப்பதற்கு நிறைய இடங்கள் இருந்தால், அந்த இடத்தை தேர்வு செய்வர். அப்படிப்பட்டவர்களுக்கு ஏற்ற இடமாக உள்ளது தேவ்காட் தீவு.
உத்தர கன்னடா, கார்வார் ரவீந்திரநாத் தாகூர் கடற்கரையில் இருந்து, கடலுக்குள் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தேவ்காட் தீவு. பொங்கி எழும் அரபிக்கடலின் நடுவில் பசுமையான ஒரு இடம். அந்த இடத்தில் 20 ஏக்கர் பச்சை, பசலேன மரங்கள். இது தான் தேவ்காட் தீவு. இந்த தீவு மத்திய அரசின் துறைமுக துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அந்த தீவில் உள்ள ஆங்கிலேயர் காலத்து கலங்கரை விளக்கம், படகில் செல்லும் போதே பார்க்க பிரமாண்டமாக இருக்கும். இதுதவிர கலங்கரை விளக்கத்தின் பக்கத்தில் பழங்கால புகைபோக்கி, பைனாகுலர், சிம்னி விளக்குகளும் உள்ளன. கலங்கரை விளக்கத்தின் உச்சிக்குச் சென்று, அங்கிருந்து கடலின் அழகை கண்டு ரசிக்கலாம்.
தீவுப் பகுதியில் உள்ள பாறைகளில் ஏறி, மலையேற்றமும் செல்லலாம். மலையின் உச்சியில் இருந்து ரம்மியமாக காட்சி அளிக்கும் கலங்கரை விளக்கம், கடல் அலைகளை கண்டு ரசிக்கும் வாய்ப்பு உண்டு. தீவு பகுதியில் அடிக்கடி பெரிய டால்பின்கள் துள்ளிக்குதித்து விளையாடும். இதை கண்கூடாக கண்டு ரசிக்கலாம்.
இந்த தீவுக்கு மழைக்காலத்தில் செல்ல அனுமதி இல்லை. கோடை, குளிர்காலங்களில் சென்று வரலாம். கார்வார் கடற்கரையில் பழங்கால போர்க்கப்பலை அருங்காட்சியமாக மாற்றி உள்ளனர். சிவாஜி கோட்டை, நீர் சாகச விளையாட்டுகள் விளையாடவும் அனுமதி இருக்கிறது.
பெங்களூரில் இருந்து கார்வாருக்கு அரசு, ஆம்னி பஸ் வசதி உள்ளது. ரயிலிலும் செல்லலாம். விமானத்தில் சென்றால் கோவா சென்று அங்கிருந்து வந்தால் எளிதாக இருக்கும். பனாஜியில் இருந்து கார்வார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கிருந்து வடமேற்கு கர்நாடகா அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள், கோவா அரசின் கடம்பா பஸ் சேவையும் கிடைக்கும்.
- நமது நிருபர் -