நைஸ் திட்ட கூடுதல் நிலங்களை ஒப்படைக்க தேவகவுடா வலியுறுத்தல்
நைஸ் திட்ட கூடுதல் நிலங்களை ஒப்படைக்க தேவகவுடா வலியுறுத்தல்
நைஸ் திட்ட கூடுதல் நிலங்களை ஒப்படைக்க தேவகவுடா வலியுறுத்தல்
ADDED : ஜன 06, 2024 06:59 AM

பெங்களூரு: “நைஸ் எனும் பெங்களூரு - மைசூரு இன்ப்ராஸ்ட்ரக்சர் காரிடார் திட்டத்துக்கு கையகப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படாமல் உள்ள கூடுதல் நிலத்தை, விவசாயிகளுக்கு திரும்பத் தர வேண்டும்,” என, ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடா வலியுறுத்தினார்.
பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
நைஸ் திட்டத்துக்கு கையகப்பட்ட கூடுதல் நிலத்தை, விவசாயிகளுக்கு திரும்பத் தர வேண்டும். இதுகுறித்து, கடந்தாண்டு அக்டோபர் 19ல், முதல்வருக்கு நான் கடிதம் எழுதினேன். முந்தைய அரசில் அமைச்சராக இருந்த ஜெயசந்திரா தலைமையிலான கமிட்டி, நைஸ் திட்டத்தின் முறைகேடுகளை விவரித்து, நடவடிக்கை எடுக்கும்படி, அரசுக்கு சிபாரிசு செய்தது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
திட்டத்துக்கு உட்படாத, 7,000 கோடி ரூபாய் மதிப்புள்ள, 13,000த்துக்கும் அதிகமான ஏக்கர் நிலங்களை, விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். சட்டசபை கமிட்டி சிபாரிசுபடி, நடவடிக்கை எடுக்க முதல்வர் சித்தராமையாவுக்கு என்ன கஷ்டம் என்பது தெரியவில்லை.
எப்போதும் ஏழைகளுக்கு ஆதரவாக பேசும் சித்தராமையா, நைஸ் திட்டம் விஷயத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால், நல்லாட்சி அளித்தாலும் கரும்புள்ளியில் இருந்து, வெளியே வர முடியாது.
ஜே.எச்.படேல், எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வராக இருந்த காலத்தில் நடந்துள்ள ஊழல்கள் குறித்து, காங்கிரஸ் தலைவி சோனியா முன்னிலையில் பேச்சு நடத்தப்பட்டது. அப்போது அன்றைய முதல்வர் தரம்சிங், நான், குமாரசாமி இருந்தோம்.
நைஸ் திட்டத்தின் முறைகேடு குறித்து, நடவடிக்கை எடுக்கும்படி தரம்சிங்குக்கு, சோனியா உத்தரவிட்டார். இதுவரை நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்கிறது.
நைஸ் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தில், எங்கள் கட்சி சமரசம் செய்து கொள்ளாது. பின் வாங்காது. ஏழைகள், விவசாயிகளுக்கு ஆதரவான எங்கள் போராட்டம் நீடிக்கும். எடியூரப்பா முதல்வராக இருந்த போதும், கூடுதல் நிலத்தை திருப்பி தர முடியாது என, உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
30 ஆண்டுகள் பழைய வழக்கை மீண்டும் கையில் எடுத்ததன் மூலம், மாநில அரசு பழி வாங்கும் அரசியல் செய்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் நட்பு கட்சியான நாங்கள், பழி வாங்கும் அரசியலுக்கு எதிராக குரல் எழுப்புவோம்.
ஸ்ரீராமனை பூஜிக்கும் விஷயத்தில், எந்த அவநம்பிக்கை, மனதில் தயக்கமோ இல்லை. முஸ்லிம் சமுதாயத்தினர் கொடுத்த தங்க கத்தியை, ராமர் கோவிலுக்கு வழங்கினேன். வேறு சமுதாயத்தினருக்கு அபாயம் ஏற்பட்டால், பாதுகாப்பு அளிப்பது, ஆட்சியில் இருப்போரின் பொறுப்பு. பிரதமராக இருந்தபோது, தர்காவுக்கும் சென்றுள்ளேன், கோவிலுக்கும் சென்றுள்ளேன். கட்சி பாகுபாடின்றி நடந்து கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.