டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிப்பு: 150 பேர் பாதிப்பு
டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிப்பு: 150 பேர் பாதிப்பு
டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிப்பு: 150 பேர் பாதிப்பு
ADDED : ஜன 11, 2024 11:27 PM
பெங்களூரு: வானிலை மாற்றத்தால், கர்நாடகாவில் டெங்கு அதிகரிக்கிறது. ஒரே வாரத்தில் 150 பேர் பாதிப்படைந்துள்ளனர். ஆண்டின் துவக்கத்திலேயே, டெங்கு ஏறுமுகமாவதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் கவலை அடைந்துஉள்ளனர்.
இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கடந்தாண்டுடன் ஒப்பிட்டால், நடப்பாண்டு துவக்கத்திலேயே, டெங்கு அதிகரிப்பது கவலைக்குரிய விஷயமாகும். 2023ல் 16,500 க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. ஒன்பது பேர் உயிரிழந்தனர். கடந்த ஒரு வாரத்தில், 1,371 பேரின் ரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டது. இதில் 150 பேருக்கு டெங்கு உறுதியானது.
மாநிலத்தில் ஒரு வாரமாக, மழை, மேகமூட்டமான சூழ்நிலை நிலவுகிறது. மக்களுக்கு காய்ச்சல், சளி, தொண்டை வலி தென்படுகிறது. ஏடிஸ் கொசுக்களால் டெங்கு பரவுகிறது. கொசு கடித்த மூன்று முதல் 14 நாட்களுக்கு பின், டெங்கு தீவிரமடைந்து வெளியே தெரியும்.
விட்டு விட்டு காய்ச்சல், தொண்டை வலி, சளி, உடல் சோர்வு, வாந்தி அல்லது மலத்தில் ரத்தம் வருவது, உதட்டில் சிறிய சிவப்பு கொப்பளங்கள் ஏற்படுவது, டெங்குவின் அறிகுறிகளாகும். இவைகள் இருந்தால், உடனடியாக டாக்டரிடம் சென்று, பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
கடந்த ஏழு நாட்களில், கர்நாடகாவில் 28 பேருக்கு சிக்குனியா தென்பட்டுள்ளது.
இதற்கிடையில் கொரோனா தொற்றும் அதிகரிப்பதால், மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.