பெரிய கட்டடங்களில் 'ஆன்டி ஸ்மோக் கன்' பொருத்த டில்லி மாநில அரசு உத்தரவு
பெரிய கட்டடங்களில் 'ஆன்டி ஸ்மோக் கன்' பொருத்த டில்லி மாநில அரசு உத்தரவு
பெரிய கட்டடங்களில் 'ஆன்டி ஸ்மோக் கன்' பொருத்த டில்லி மாநில அரசு உத்தரவு
ADDED : செப் 13, 2025 01:02 AM

புதுடில்லி:'தனியாருக்கு சொந்தமான, தரைத்தளத்துடன் கூடிய ஐந்தடுக்கு கட்டடங்களுக்கு 'ஆன்டி ஸ்மோக் கன்' எனும் பனிமூட்டத்தை தடுக்கும் கருவி கட்டாயம் பொருத்தப்பட வேண்டும். இன்று துவங்கி, நவம்பர் 29க்குள் இந்த பணியை முடிக்க வேண்டும்' என டில்லி மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர் சிர்சா நேற்று முன்தினம் பிறப்பித்த உத்தரவு:
வீடுகளுக்கு விலக்கு தனியாருக்கு சொந்தமான வர்த்தக வளாகங்கள், ஷாப்பிங் மால்கள், ஹோட்டல்கள், அலுவலக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற, தரை தளத்துடன் கூடிய ஐந்தடுக்குக்கு மேற்பட்ட கட்டடங்களில் 'ஆன்டி ஸ்மோக் கன்' பொருத்தப்படுவது கட்டாயமாகிறது.
இந்த உத்தரவில் இருந்து வீடுகள், சொசைட்டிகள், அடுக்கு மாடி வளாகங் களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
'பீல்டு அப் ஏரியா' எனப்படும் கட்டுமானம் உள்ள பகுதிகளை பொருத்து, எத்தனை கருவிகள் பொருத்த வேண்டும் என்பது கட்டாயமாகிறது.
அதாவது, 10 ஆயிரம் சதுர மீட்டர் கட்டுமானம் கொண்ட கட்டடங்களுக்கு குறைந்தபட்சம் மூன்று ஆன்டி ஸ்மோக் கன் பொருத்தப்பட வேண்டியது அவசியம்.
அதுபோல, 10,001 முதல் 15 ஆயிரம் சதுர மீட்டர் வரையிலான கட்டடங்களில் குறைந்தபட்சம் நான்கு கருவிகள் பொருத்தப்படுவது அவசியம்.
விரைவில் பனிக்காலம் மேலும், 15,001 முதல், 20,000 சதுர மீட்டர் பில்டு அப் ஏரியா உள்ள கட்டடங்களில் குறைந்தபட்சம் ஐந்து கன்கள் பொருத்தப்படுவது அவசியம். கூடுதலாக, 5,000 சதுர மீட்டர் கட்டப்படும் போது, கூடுதலாக ஒரு ஆன்டி ஸ்மோக் கன் பொருத்தப்படுவது கட்டாயமாகிறது.
இந்த உத்தரவை பிறப்பித்து, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிர்சா கூறும் போது,''பனிக் காலம் நெருங்குகிறது. பனியின் போது காற்றில் கலந்துள்ள பி.எம்., 10, பி.எம்., 2.5 மூலக்கூறுகள் அதிகரித்து பொதுமக்களுக்கு பல வித பாதிப்புகளை ஏற்படுத்தும். அவற்றை, ஆன்டி ஸ்மோக் கன் வாயிலாக தடுக்க முடியும்.
''எனவே, இன்று துவங்கும் இதற்கான பணி, நவம்பர் 26ம் தேதி முடிக்கப்பட வேண்டும். இந்த காலக்கெடுவுக்குள் இந்த கருவியை உயர்ந்த கட்டடங்களில் பயன்படுத்தவில்லை என்றால் அரசு சார்பில் அபராதம் விதிக்கப்படும்,'' என்றார்.