Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/பஸ், ரயில்களில் அலைமோதிய கூட்டம்

பஸ், ரயில்களில் அலைமோதிய கூட்டம்

பஸ், ரயில்களில் அலைமோதிய கூட்டம்

பஸ், ரயில்களில் அலைமோதிய கூட்டம்

ADDED : ஜன 13, 2024 11:21 PM


Google News
Latest Tamil News
பெங்களூரு: பொங்கல் பண்டிக்கைக்காக பெங்களூரில் வசிப்பவர்கள், சொந்த ஊர்களுக்கு செல்வதால், பஸ், ரயில்களில் நேற்று கூட்டம் அலைமோதியது.

நாளை தமிழகத்தில் பொங்கல், கர்நாடகாவில் சங்கராந்தி கொண்டாடப்படுகிறது. சனி, ஞாயிறு, திங்கள் என்று மூன்று நாட்கள் தொடர் விடுமுறை.

இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவே, பெங்களூரில் வசிக்கும் தமிழக மக்கள், கர்நாடகாவின் மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள், தங்கள் ஊர்களுக்குச் செல்லத் துவங்கி உள்ளனர்.

இதனால், நேற்று முன்தினம் இரவு மெஜஸ்டிக் பஸ் நிலையம், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பஸ், ரயில் நிலையங்களில் நேற்றும் கூட்டம் அலைமோதியது.

பெங்களூரு மெஜஸ்டிக்கில் இருந்து பெலகாவி, பல்லாரி, விஜயாபுரா, கதக், கலபுரகி, தார்வாட், பீதர், யாத்கிர், ராய்ச்சூர் உள்ளிட்ட வடமாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பஸ்களில், பயணியர் முண்டியடித்து கொண்டு ஏறினர்.

தமிழக அரசு பஸ்கள்


இதுபோல, விஜயநகர் பஸ் நிலையத்தில் இருந்து ஷிவமொகா, சிக்கமகளூரு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இயங்கிய பஸ்களிலும், இருக்கைகள் நிரம்பின.

சாட்டிலைட் பஸ் நிலையத்தில் இருந்து மைசூரு, குடகு, மடிகேரி, விராஜ்பேட் உள்ளிட்ட பகுதிகளுக்கு, இயக்கப்பட்ட பஸ்களும் நிரம்பிச் சென்றன.

இதுபோல, சாந்திநகர் பஸ் நிலையத்தில் இருந்து, தமிழகத்தின் சென்னை, மதுரை, கோயம்புத்துார், ஊட்டி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில்.

துாத்துக்குடி, தேனி, கம்பம், போடி உள்ளிட்ட ஊர்களுக்கு இயக்கப்பட்ட, தமிழக அரசு பஸ்களிலும், சாட்டிலைட் பஸ் நிலையத்தில் இருந்து சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், விருத்தாசலம், கடலுார், தாம்பரம், வேலுார், திருப்பத்துார், திருவண்ணாமலை உள்ளிட்ட ஊர்களுக்கு இயக்கப்பட்ட பஸ்களிலும், கூட்டம் அலைமோதியது.

கட்டணம் உயர்வு


பஸ்கள் நிரம்பி வழிந்ததால், பயணியர் பஸ்சில் நின்று கொண்டே பயணம் செய்தனர்.

இதுபோல, ரயில் நிலையங்களிலும் கூட்டம் அலைமோதியது. பெங்களூரு - நாகர்கோவில், மைசூரு - துாத்துக்குடி, பெங்களூரு - கொச்சுவேலி, பெங்களூரு - சென்னை ரயில்களில், முன்பதிவு செய்யப்படாத பெட்டியில், பயணியர் கூட்டம் அலைமோதியது.

பெங்களூரு - தார்வாட், பெங்களூரு - பெலகாவி, பெங்களூரு - கன்னியாகுமரி ரயில்களிலும் பயணியர் கூட்டம் அதிகமாக இருந்தது.

பொங்கல் பண்டிகை கூட்ட நெரிசலை பயன்படுத்தி, தனியார் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் டிக்கெட் கட்டணத்தை, ராக்கெட் வேகத்தில் உயர்த்தினர்.

சாதாரண நாட்களில் இருக்கும் கட்டணத்தை விட, மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. பண்டிகையை கொண்டாட, ஊருக்கு சென்றே ஆக வேண்டும் என்ற நினைப்பில் இருந்த பயணியர், மூன்று மடங்கு அதிக கட்டணம் கொடுத்துச் சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us