துப்பாக்கியை பறித்து போலீசை தாக்க முயன்ற குற்றவாளி
துப்பாக்கியை பறித்து போலீசை தாக்க முயன்ற குற்றவாளி
துப்பாக்கியை பறித்து போலீசை தாக்க முயன்ற குற்றவாளி
ADDED : ஜூன் 12, 2025 09:49 PM

பாலக்காடு; பாலக்காட்டில், திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர், எஸ்.ஐ.,யின் கைத்துப்பாக்கியை பறித்து, போலீசாரை தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரள மாநிலம், பாலக்காடு கல்மண்டபம் பகுதி பிரதிபா நகரில், கடந்த மாதம் 14ம் தேதி சிவதாசன் என்பவரது வீட்டின் கதவை உடைத்து, 7.80 லட்சம் ரூபாய் திருடப்பட்டது.
இதுகுறித்து, பாலக்காடு புதுச்சேரி (கசபா) போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் தலைமையில் தனிப்படை அமைத்து, அங்குள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தினர்.
விசாரணையில், வீட்டு கதவை உடைத்து பணம் திருடியது தெலுங்கானா போத்ராய் கோரக்குண்டா வாரங்கல் பகுதியைச் சேர்ந்த மணிமாறன், 41, என்பதும், அவர் மீது ஆந்திரா, கர்நாடகா, தமிழகத்தில் 70-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரிந்தது.
இந்நிலையில், கோவை காரமடை அருகே பூட்டியிருந்த வீட்டில், 25 சவரன் நகையை திருடிய வழக்கில் கோவை போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில், மணிமாறனை நேற்று முன்தினம் கஸ்டடியில் எடுத்த பாலக்காடு புதுச்சேரி போலீசார், நேற்று மதியம், 12:00 மணிக்கு சம்பவ இடத்துக்கு சாட்சியங்கள் சேகரிப்பதற்காக அழைத்து வந்தனர்.
அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் அருகே நின்றிருந்த மணிமாறன், எஸ்.ஐ., ஹர்ஷாத் வைத்திருந்த கைத்துப்பாக்கியை பறித்தெடுத்து தாக்க முயன்றார். போலீசார் சரியான நேரத்தில் தடுத்ததால் அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க முடிந்தது. இதையடுத்து, மணிமாறனை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.