ADDED : பிப் 10, 2024 06:20 AM
கார் மோதி 8 பைக்குகள் சேதம்
உல்லால் அருகே நேற்று முன்தினம் இரவு, ஒரு கார் வேகமாக சென்றது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால், சாலையோரம் நின்ற 8 பைக்குகள் மீது மோதி, கார் நின்றது. இதில் எட்டு பைக்குகளும் சேதம் அடைந்தன. அந்த காரை குர்தீப் என்பவர் ஓட்டினார். கார் ஓட்டி பயிற்சி எடுக்கும் போது, விபத்து நடந்தது தெரிந்தது. விபத்துக்குள்ளான கார் பறிமுதல் செய்யப்பட்டது.
மர்மபொருள் வெடித்து விவசாயி காயம்
உத்தர கன்னடா முண்டுகோடு மஜிகேரி கிராமத்தின் பரமண்ணா போவி, 55. நேற்று மாலை கிராமத்தில் உள்ள ஏரியின் அருகில், ஆடு மேய்த்தார். அப்போது ஏரிக்கரையில் ஏதோ ஒரு பொருள் பளபளப்பாக மின்னியது. அந்த பொருளை பரமண்ணா கையில் எடுத்தார். அப்போது அந்த பொருள் திடீரென வெடித்து சிதறியது. இதில் பரமண்ணாவின் கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். வெடித்த மர்மபொருள் குறித்து விசாரணை நடக்கிறது.
ஆற்றில் மூழ்கி தந்தை மகன் பலி
உத்தர கன்னடா எல்லாபுரா கம்பளி - ஹல்லிகத்தே பகுதியில் வசித்தவர் கலந்தர், 51. இவரது மகன் அப்துல் காதர், 22. நேற்று மாலை கிராமத்தில் ஓடும் பெத்தி ஆற்றில், தந்தையும், மகனும் மீன்பிடிக்க சென்றனர். ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற, அப்துல் காதர் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் தத்தளித்தார். மகனை காப்பாற்ற கலந்தர் முயன்றார். ஆனால் அவரும் ஆழத்தில் சிக்கினார். சிறிது நேரத்தில் இருவரும் ஆற்றில் மூழ்கி இறந்தனர்.
ரூ.16 கோடி திமிங்கல எச்சில் பறிமுதல்
சாம்ராஜ்நகர் கொள்ளேகால் சந்தேகாலா வனப்பகுதி சாலையில், வனத்துறையினர் நேற்று காலை வாகன சோதனை நடத்தினர். அந்த வழியாக வந்த காரை நிறுத்தி, சோதனை நடத்திய போது, டிக்கியில் இருந்த 16 கிலோ எடையுள்ள, திமிங்கல எச்சில் சிக்கியது. சர்வதேச சந்தையில் அதன் மதிப்பு 16 கோடி ரூபாய். திமிங்கல எச்சிலை சேலத்திற்கு எடுத்து சென்றது தெரிந்தது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.