புலி நகம் விற்க முயற்சி
சிக்கமகளூரு மட்டவார் பகுதியில் புலி நகங்கள், பற்கள் விற்க முயன்றதாக, மூடிகெரேயின் சதீஷ், சந்திர கவுடாவை வனத்துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் 4 புலி நகங்கள், 2 பற்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நில அளவையர் கைது
உத்தர கன்னடா, யல்லாபுரா தாலுகா அலுவலகத்தில் நில அளவையராக வேலை செய்பவர் தீரஜ்.
இவர் நிலத்தை அளக்க விவசாயி ஒருவரிடம் நேற்று 2,500 ரூபாய் லஞ்சம் வாங்கினார். அவரை லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்தனர்.
விபத்தில் இருவர் பலி
கதக் முண்டரகி ஹல்லிகுடி கிராமத்தில் நேற்று மாலை அரசு பஸ்சும், லாரியும் நேருக்குநேர் மோதியது.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த, இருவர் இறந்தனர். 15 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டு உள்ளது.
12 வயது சிறுமி தற்கொலை
பெங்களூரு ஹுளிமாவு பேகூர் சாலையில் உள்ள, அடுக்குமாடி குடியிருப்பின் 29வது மாடியில், ஒரு தம்பதி வசித்தனர். இவர்களின் மகள் 12 வயது சிறுமி.
நேற்று காலை 5:30 மணிக்கு 29வது மாடியில் இருந்து குதித்து, தற்கொலை செய்து கொண்டார். என்ன காரணம் என்று தெரியவில்லை.