அய்யப்ப பக்தர்கள் காயம்
மைசூரை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 34 பேர் சபரிமலைக்கு, பஸ்சில் சென்றனர். அய்யப்பனை தரிசித்துவிட்டு, சிக்கமகளூரு சிருங்கேரி வந்தனர். அங்கிருந்து ஒரநாடு சென்று கொண்டிருந்தனர்.
கொப்பா ஜெயபுரா கிராசில் பஸ் சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. தறிகெட்டு ஓடி சாலையோரம் கவிழ்ந்தது. விபத்தில் 15 அய்யப்ப பக்தர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
விவசாயி தற்கொலை
விஜயபுரா இண்டி அஞ்சுதாகி கிராமத்தில் வசித்தவர் அடிவப்பா, 43; விவசாயி. நேற்று முன்தினம் இரவு மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் கழுத்தில் எலுமிச்சை பழ மாலை இருந்தது.
மாந்திரிக செயலில் ஈடுபட்டு, அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடந்த சில தினங்களாக அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
கட்டட தொழிலாளி பலி
திரிபுராவை சேர்ந்தவர் திபங்கரா சாசா, 21. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் தங்கி, கட்டட தொழிலாளியாக வேலை செய்தார். நேற்று முன்தினம் பணியில் இருந்த போது, இரும்பு கம்பி அவரது தலையில் விழுந்தது. படுகாயம் அடைந்தவர் பரிதாபமாக இறந்தார்.