இந்த ஆண்டு இறுதிக்குள் மாட்டுச்சாண எரிவாயு ஆலை
இந்த ஆண்டு இறுதிக்குள் மாட்டுச்சாண எரிவாயு ஆலை
இந்த ஆண்டு இறுதிக்குள் மாட்டுச்சாண எரிவாயு ஆலை
ADDED : ஜூன் 29, 2025 10:19 PM

மதுரா:''யமுனை நதியை துாய்மைப்படுத்தல், டில்லியில் உள்ள குப்பை மலைகளை அகற்றுதல் ஆகிய பணிகளுக்கு அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து பணியாற்றி வருகிறது,'' என, முதல்வர் ரேகா குப்தா கூறினார்.
உத்தர பிரதேச மாநிலம், மதுரா மாவட்டம் கோசிகலன் அருகே கமர் கிராமத்தில், டில்லி தொழிலதிபர் 16 கோடி ரூபாய் செலவில் அமைத்துள்ள, மாட்டுச் சாணத்தில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் சி.என்.ஜி., ஆலையை ரேகா குப்தா துவக்கி வைத்தார்.
அப்போது, நிருபர்களிடம் ரேகா குப்தா கூறியதாவது:
நதி மாசுபாட்டை தீர்க்க பால் பண்ணைகளுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.
கழிவிலிருந்து செல்வம் என்ற மந்திரத்தைப் பயன்படுத்தி, அடுத்த இரண்டு ஆண்டுகளில் டில்லியின் தேவைக்கேற்ப மாட்டு சாண எரிவாயு ஆலைகள் அமைக்கப்படும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் இதே போன்ற இரண்டு ஆலைகள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். டில்லி சாலைகளில் தினமும் ஆயிரக்கணக்கான மெட்ரிக் டன் மாட்டு சாணம் கொட்டப்படுகிறது. அதை அகற்றுவது டில்லி மாநகராட்சிக்கு பெரும் பிரச்னையாக இருக்கிறது. அதேபோல, யமுனை நதி மாசுபாட்டிலும் மாட்டுச் சாணம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
முந்தைய ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் அரசுகள் யமுனை நதி மீது கவனம் செலுத்தவில்லை. டில்லியில் சி.என்.ஜி., ஆலைகள் அமைப்பதால், மாட்டுச் சாணம் சாலையில் கொட்டப்படுவது தவிர்க்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உத்தர பிரதேச கரும்பு மற்றும் சர்க்கரை தொழிற்துறை அமைச்சர் லட்சுமி நாராயண் சவுத்ரி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். இடைத் தொடர்ந்து, கிரிராஜ் மலையை வலம் வந்த ரேகா குப்தா, பாங்கே பிஹாரி கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.