Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ ஒரே 'ஷிப்டில்' முதுநிலை நீட் தேர்வு தேர்வு முகமைக்கு கோர்ட் உத்தரவு

ஒரே 'ஷிப்டில்' முதுநிலை நீட் தேர்வு தேர்வு முகமைக்கு கோர்ட் உத்தரவு

ஒரே 'ஷிப்டில்' முதுநிலை நீட் தேர்வு தேர்வு முகமைக்கு கோர்ட் உத்தரவு

ஒரே 'ஷிப்டில்' முதுநிலை நீட் தேர்வு தேர்வு முகமைக்கு கோர்ட் உத்தரவு

ADDED : மே 31, 2025 03:42 AM


Google News
புதுடில்லி: நாடு முழுதும் ஜூன் 15ல் நடைபெற உள்ள முதுநிலை நீட் தேர்வை ஒரே ஷிப்டில் நடத்தும்படி, தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

மருத்துவத்தில் முதுநிலை படிப்புகளில் சேர, முதுநிலை நீட் நுழைவுத் தேர்வு நடக்கிறது. கடந்த ஆண்டு இரண்டு ஷிப்டுகளாக இந்த தேர்வு ஆன்லைன் வழியில் நடந்தது.

அப்போது, இரண்டாவது ஷிப்ட் தேர்வு எளிதாகவும், முதல் ஷிப்ட் தேர்வு கடினமாகவும் இருந்ததாக மாணவர்கள் கூறினர். இந்த ஆண்டு முதுநிலை நீட், ஜூன் 15ல் நடக்கிறது; நாடு முழுதும் 2.42 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

445 மையங்கள்


தேர்வை ஒரே கட்டமாக நடத்த உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் சிலர் மனு தாக்கல் செய்தனர். 'இரண்டு ஷிப்டாக தேர்வு நடத்துவதால், இதில் வெளிப்படைத்தன்மை இல்லை.

'ஒரு ஷிப்டின் வினாத்தாள் எளிதாகவும், மற்றொரு ஷிப்டின் வினாத்தாள் கடினமாகவும் இருப்பது, மாணவர்களிடையே பாரபட்சம் காட்டும் வகையில் உள்ளது' என, அந்த மனுக்களில் கூறப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதிகள் விக்ரம் நாத், சஞ்சய் குமார், என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அமர்வு முன் நடைபெற்றது.

மே 5ல் நடந்த விசாரணையின்போது, இதுகுறித்து பதிலளிக்கும்படி, தேசிய தேர்வு முகமை, தேசிய மருத்துவ கவுன்சில், மத்திய சுகாதார அமைச்சகம் ஆகியவற்றுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

வழக்கு விசாரணை நேற்று மீண்டும் வந்தபோது, 'ஆன்லைனில் தேர்வு நடப்பதால், வை பை, கணினி உள்ளிட்ட வசதிகளைக் கொண்ட தேர்வு மையங்கள் தேவை. தற்போது 445 மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

'ஒரே ஷிப்டில் தேர்வு நடத்தினால், 900 மையங்கள் தேவைப்படும். குறுகிய காலத்தில் அவற்றை கண்டறிய முடியாது. இதனால், தேர்வும், முதுநிலை மருத்துவ சேர்க்கையும் தாமதமாகும்' என தேசிய தேர்வுகள் முகமை தரப்பில் வாதிடப்பட்டது.

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஒரே ஷிப்டில் முதுநிலை நீட் தேர்வை நடத்த உத்தரவிட்டனர்.

இது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:

எந்த இரண்டு வினாத்தாள்களும் ஒரே மாதிரி எளிமையாகவோ அல்லது கடினமாகவோ இருக்கும் என ஒருபோதும் கூற முடியாது.

இரண்டு ஷிப்டு தேர்வு, தன்னிச்சையான செயலுக்கு வழிவகுக்கும். அனைத்து விண்ணப்பதாரர்களையும் ஒரே மட்டத்தில் வைத்திருக்காது.

ஏற்றுக்கொள்ள முடியாது


கடந்த ஆண்டு, சூழ்நிலை அடிப்படையில் இரண்டு ஷிப்டுகளில் தேர்வு நடத்தி இருக்கலாம். ஆனால் இந்த ஆண்டில், ஒரே ஷிப்டில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்வு வாரியம் செய்திருக்க வேண்டும்.

ஒரு நகரில் மட்டும் தேர்வு நடக்கவில்லை; நாடு முழுதும் நடக்கிறது.

எனவே, ஒரே ஷிப்டில் தேர்வு நடத்தும் தொழில்நுட்ப கட்டமைப்புகளை கண்டுபிடிக்க முடியவில்லை என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஜூன் 15ல் தேர்வு நடத்துவதற்கு, இன்னும் இரண்டு வார கால அவகாசம் இருக்கிறது. அதற்குள் தேர்வு மையங்களை கண்டறியலாம். எனவே, முழு வெளிப்படைத் தன்மையுடன் ஒரே ஷிப்டில் தேர்வை நடத்த உத்தரவிடுகிறோம்.

ஜூன் 15க்குள் போதுமான தேர்வு மையங்களை கண்டறிய முடியாவிட்டால், கால நீட்டிப்பு கேட்டு நீதிமன்றத்தை அணுகலாம்.

ஆனால், முயற்சி செய்யாமலேயே முன்கூட்டியே தீர்மானித்து, முடியாது என கூறக்கூடாது; முயற்சி செய்யுங்கள். அப்படி நடந்து விடும்; இப்படி நடந்து விடும் என மிரட்ட வேண்டாம். தேர்வு நடந்த பின் இந்த பிரச்னை குறித்து மீண்டும் பரிசீலிக்கப்படும்.

எனவே, வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 14க்கு ஒத்திவைக்கப்படுகிறது.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us