சி.பி.ஐ., விசாரணையை எதிர்க்கும் மேற்கு வங்க மனுவை ஏற்றது கோர்ட்
சி.பி.ஐ., விசாரணையை எதிர்க்கும் மேற்கு வங்க மனுவை ஏற்றது கோர்ட்
சி.பி.ஐ., விசாரணையை எதிர்க்கும் மேற்கு வங்க மனுவை ஏற்றது கோர்ட்
ADDED : ஜூலை 10, 2024 09:50 PM

புதுடில்லி : பொது அனுமதியை திரும்ப பெற்ற பிறகும், பல வழக்குகளில் சி.பி.ஐ., விசாரணை நடத்துவதை எதிர்த்து மேற்கு வங்க அரசு தொடர்ந்துள்ள வழக்கை, உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி அமைந்துள்ளது. மாநிலத்தில் சி.பி.ஐ., விசாரணை நடத்துவதற்கான பொது அனுமதியை, மேற்கு வங்க அரசு 2018 நவ., 16ல் திரும்ப பெற்றது.
இந்நிலையில், சில வழக்குகளில் சி.பி.ஐ., தொடர்ந்து மாநிலத்தில் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்க அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், மத்திய அரசையும் வாதியாகச் சேர்த்துள்ளது. இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த மே 8ம் தேதி தீர்ப்பை ஒத்தி வைத்தது. நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு, இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்தது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சி.பி.ஐ., ஒரு சுதந்திரமான அமைப்பு. வழக்குகள் பதிவு செய்வது, விசாரிப்பதில் மத்திய அரசு எந்த விதத்திலும் தலையிடுவதில்லை; கண்காணிப்பதில்லை என்று மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டு உள்ளது.
ஆனால், எந்தெந்த வழக்குகளில் சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிடுகிறது. அதனால், இந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் வாதம் ஏற்கப்படவில்லை.மாநிலத்தின் பொது அனுமதி இல்லாமல், சி.பி.ஐ., அந்த மாநிலத்தில் விசாரிக்க முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக, மாநில அரசு தொடர்ந்துள்ள வழக்கு, விசாரணைக்கு ஏற்கப்படுகிறது.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.வழக்கின் விசாரணை, ஆக., 13ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.