Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ 'பாலியல் சீண்டல் பலாத்காரம் அல்ல' ஐகோர்ட் உத்தரவால் சர்ச்சை

'பாலியல் சீண்டல் பலாத்காரம் அல்ல' ஐகோர்ட் உத்தரவால் சர்ச்சை

'பாலியல் சீண்டல் பலாத்காரம் அல்ல' ஐகோர்ட் உத்தரவால் சர்ச்சை

'பாலியல் சீண்டல் பலாத்காரம் அல்ல' ஐகோர்ட் உத்தரவால் சர்ச்சை

ADDED : மார் 21, 2025 02:41 AM


Google News
பிரயாக்ராஜ்,சிறுமி மீதான பாலியல் வன்முறை தொடர்பான வழக்கில், பாலியல் சீண்டல்கள் பலாத்காரமாகாது என, அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு சர்ச்சையை எழுப்பியுள்ளது.

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த, 11 வயது சிறுமி ஒருவரை, 2021ல், காஸ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த பவன், ஆகாஷ் என்ற இளைஞர்கள் மறைவிடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்முறையில் ஈடுபட்டனர்.

தப்பி ஓடிவிட்டனர்


அப்போது அந்தச் சிறுமியில் அலறல் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்ததால், அந்த இளைஞர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

கைது செய்யப்பட்ட அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ், பாலியல் பலாத்கார வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் ஆஜராக விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து, அவர்கள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒரு பெண்ணின் அல்லது சிறுமியின் மார்பகத்தைப் பிடிப்பது, அவர் அணிந்திருந்த பைஜாமாவின் நாடாவை அறுத்தது ஆகியவை பாலியல் பலாத்காரமோ, பலாத்கார முயற்சியோ ஆகாது. இது, குறைந்த தண்டனை உடைய பாலியல் சீண்டலாகவே பார்க்க முடியும்.

பலாத்கார முயற்சிக்கும், அதற்கு தயாராகுவதற்கும் வித்தியாசம் உள்ளது. இந்த சம்பவத்தில் அந்த இருவரும் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதற்கான எந்த ஆதாரமும் தாக்கல் செய்யப்படவில்லை.

அந்தச் சிறுமியும் நிர்வாணமாக்கப்படவில்லை என்று கூறப்பட்டுஉள்ளது.

அந்த இளைஞர்களும் ஆடைகள் இல்லாமல் இருந்ததாக எந்த சாட்சியும் கூறவில்லை. அவர்கள் பலாத்காரம் செய்ததாகவோ, அதற்கு முயற்சி செய்ததாகவோ நிரூபிக்கப்படவில்லை; ஆனால், அவர்கள் பலாத்காரத்துக்கு தயாராயினர்.

சாதாரண தண்டனை


இதை சாதாரண தண்டனையுடன் கூடிய குற்றப் பிரிவுகளின் கீழ் தான் விசாரிக்க முடியும். பலாத்காரம் அல்லது பலாத்கார முயற்சி பிரிவுகளில் விசாரிக்க முடியாது.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு பல விமர்சனங்களை எழுப்பியுள்ளது. சமூக வலைதளங்களிலும் பலர் கடுமையாக விமர்சித்து பதிவிட்டுஉள்ளனர்.

'இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து, நீதிபதிகளுக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் குறிப்பிட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us