விதிகளை மீறி அதிகாலை வரை 'பார்ட்டி' கன்னட நடிகர் தர்ஷனால் சர்ச்சை
விதிகளை மீறி அதிகாலை வரை 'பார்ட்டி' கன்னட நடிகர் தர்ஷனால் சர்ச்சை
விதிகளை மீறி அதிகாலை வரை 'பார்ட்டி' கன்னட நடிகர் தர்ஷனால் சர்ச்சை
ADDED : ஜன 07, 2024 02:41 AM

பெங்களூரு : படத்தின் வெற்றியை கொண்டாடுவதற்காக, விதிகளை மீறி நடிகர் தர்ஷன், அதிகாலை வரை 'பார்ட்டி' கொடுத்துள்ளார். இதுதொடர்பாக 'பப்' பெண் உரிமையாளர், காசாளர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது.
மது விருந்து
கன்னட நடிகர் தர்ஷன் நடிப்பில் வெளியாகி உள்ள, காட்டேரா திரைப்படம் வெற்றி பெற்று உள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், கடந்த 3ம் தேதி இரவு நடிகர் தர்ஷன், சக நடிகர், நடிகையர், தயாரிப்பாளர்களுக்கு, ராஜாஜிநகர் சுப்பிரமணியநகரில் உள்ள, 'பப்'பில், மது விருந்து கொடுத்தார்.
பொதுவாக நள்ளிரவு ஒரு மணி வரை மட்டுமே, 'பப்' திறக்க அனுமதி உள்ளது. ஆனால் தர்ஷன் கொடுத்த பார்ட்டிக்காக, மறுநாளான 4ம் தேதி காலை 5:45 மணி வரை 'பப்' திறந்து இருந்தது.
பார்ட்டிக்கு வந்தவர்கள், தங்கள் கார்களை, சாலையில் நிறுத்திச் சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த சுப்பிரமணியநகர் போலீசார், 'பப்'பிற்கு சென்று, நடிகர் தர்ஷன் உட்பட, 'பார்ட்டி'யில் பங்கேற்றவர்களை வெளியேற்றி உள்ளனர். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
போதைப்பொருள்
இதுகுறித்து கடந்த 5ம் தேதி, போலீஸ் கமிஷனர் தயானந்தா கவனத்திற்கு சென்று உள்ளது. சுப்பிரமணியநகர் போலீசாரை அவர் எச்சரித்து உள்ளார். விதிகளை மீறிய 'பப் மீது, நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு உள்ளார். இதையடுத்து 'பப்' உரிமையாளர் சசிரேகா ஜெகதீஷ், காசாளர் பிரசாந்த் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் நடிகர் தர்ஷன் மீது, போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று, குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
இதுகுறித்து வடக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சைதுல் அதாவத் நேற்று அளித்த பேட்டியில், ''அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட, கூடுதல் நேரம் 'பப்' திறந்திருந்தது குறித்து விசாரணை நடக்கிறது. இரவு முழுவதும் மது விருந்து நடந்து உள்ளது. ஆனால் போதைப்பொருள் பயன்படுத்தியதிற்கு, எந்த ஆதாரமும் இல்லை. தீவிர விசாரணை நடத்தி, திரைத்துறையினர் மீது தவறு இருந்தால், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்போம்,'' என்றார்.
உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறுகையில், ''ராஜாஜிநகரில் இரவு முழுவதும் 'பப்' திறந்து, பார்ட்டி நடத்தியது குறித்து, எனது கவனத்திற்கும் வந்து உள்ளது. துணை போலீஸ் கமிஷனர் சைலுல் அதாவத்திடம் பேசுவேன். யார் தவறு செய்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவேன்,'' என்றார்.