பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொல்ல சதி நடந்தது எப்படி?
பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொல்ல சதி நடந்தது எப்படி?
பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொல்ல சதி நடந்தது எப்படி?
ADDED : ஜூன் 01, 2024 04:03 PM

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானை, அதிநவீன ஆயுதங்கள் மூலம் கொலை செய்யவும், பிறகு இலங்கை சென்று அங்கிருந்து பாதுகாப்பான நாட்டிற்கு தப்பிச் செல்ல லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் திட்டமிட்டது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த 1988 ல் மான் வேட்டையாடிய வழக்கில் நடிகர் சல்மான்கான் மீது குற்றம்சாட்டப்பட்டது. அவர் வேட்டையாடிய மானை தங்களது சமூக சின்னமாக கருதும் பிஷ்னோய் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், சல்மான் கான் மன்னிப்பு கேட்க வேண்டும் என நிபந்தனை விதித்தனர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இச்சூழ்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் சல்மான் கான் வீட்டிற்கு அருகே டூவீலரில் வந்த இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பிச்சென்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
மும்பை அருகே பன்வெல் பகுதியில் சல்மான் கானுக்கு பண்ணை வீடு உள்ளது. இங்கு அவர் அடிக்கடி வருவது வழக்கம். இந்த இடத்தில் வைத்து சல்மான் கானை கொலை செய்ய பிஷ்னோய் கும்பல் திட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து நவி மும்பை போலீசார் தீவிர விசாரணை நடத்தி தனஞ்செய் டேப்சிங், கவுரவ் பாட்டியா, வப்சி கான், ரிஸ்வான் கான் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
விசாரணையின் போது அவர்கள் கூறியதாக போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: சல்மான் கானை, அவரது பண்ணை வீட்டில் வைத்து அல்லது வீட்டிற்கு வரும் வழியில் காரை மறித்து கொலை செய்ய பிஷ்னோய் கும்பல் திட்டமிட்டது. இதற்காக, பாகிஸ்தான் தரகரிடம் இருந்து துப்பாக்கி வாங்குவதற்கான ஏற்பாடுகளை சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய், அவரது உறவினர் அன்மோல் பிஷ்னோய், கூட்டாளி கோல்டி பிரார் ஏற்பாடு செய்து கொடுத்தனர்.
இவர்களுக்கு உதவியாக நவி மும்பையில் வசிக்கும் காஷ்யப் என்பவர் இருந்துள்ளார். இவர், வேறு சிலருடனும் தொடர்பில் இருந்துள்ளார். இதற்காக அவர்கள் ரயில் நிலையம், பஸ்ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் சந்தித்து, தங்களது திட்டம் குறித்து விவாதித்துள்ளனர். ஆயுதங்கள் வாங்குவது தொடர்பாக காஷ்யப், பிஷ்னோய் உடன் வாட்ஸ் ஆப் செயலி மூலம் தொடர்பில் இருந்துள்ளார்.
சல்மான் கானை கொல்பவர்களுக்கு கனடாவில் இருந்து பணம் அனுப்பி வைக்க பிஷ்னோய் மற்றும் கோல்டி பிரார் திட்டமிட்டனர். மேலும், தங்களது தாக்குதல் திட்டத்தை நிறைவேற்ற ஏகே 47, எம் 16, ஏகே 92 உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்த திட்டமிட்டனர். இந்த ஆயுதங்களை வாட்ஸ் ஆப் கால் மூலம் பிஷ்னோயிடம் அவர்கள் காண்பித்துள்ளனர். திட்டத்தை நிறைவேற்றுவதற்காக 60 முதல் 70 பேரின் உதவியை நாடிய இக்கும்பல், அதில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பணிகளை ஒதுக்கி இருந்தது.
சல்மான்கானை பண்ணை வீட்டில் வைத்து கொன்று விட்டு, தமிழகத்தின் கன்னியாகுமரிக்கு சென்று, கடல் வழியாக இலங்கை செல்லவும், அங்கிருந்து பாதுகாப்பாக வேறு நாட்டிற்கு செல்லவும் அவர்கள் திட்டமிட்டு இருந்தனர். வேறு சில தாதாக்களுடனும் இந்த கும்பல் தொடர்பில் இருந்துள்ளனர். சல்மான் கானை துப்பாக்கியால் சுட சிறார்களை பயன்படுத்தவும் இக்கும்பல் திட்டமிட்டு இருந்தது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.