பெங்களூரு ஆசிரியர் தொகுதி கைப்பற்ற காங்கிரஸ் முஸ்தீபு
பெங்களூரு ஆசிரியர் தொகுதி கைப்பற்ற காங்கிரஸ் முஸ்தீபு
பெங்களூரு ஆசிரியர் தொகுதி கைப்பற்ற காங்கிரஸ் முஸ்தீபு
ADDED : பிப் 10, 2024 11:36 PM

பெங்களூரு : கர்நாடக சட்ட மேலவையின், பெங்களூரு ஆசிரியர் தொகுதி இடைத்தேர்தலில், அரசியல் கட்சிகளின் பார்வை பதிந்துள்ளது. தொகுதியை கைப்பற்ற ஆளுங்கட்சி காங்கிரஸ் முயற்சிக்கிறது.
சட்ட மேலவையின் பெங்களூரு ஆசிரியர் தொகுதி பா.ஜ., - எம்.எல்.சி.,யாக இருந்தவர் புட்டண்ணா. 2023 சட்டசபை தேர்தலில், ராஜாஜிநகர் தொகுதியில் சீட் அளிக்கும்படி மன்றாடினார். ஆனால் மேலிடம் சுரேஷ்குமாருக்கு சீட் கொடுத்தது.
இதனால் கொதிப்படைந்த புட்டண்ணா, எம்.எல்சி., பதவி மற்றும் பா.ஜ.,வின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, காங்கிரசில் இணைந்து ராஜாஜிநகர் தொகுதியில் களமிறங்கினார். தோல்வி அடைந்தார்.
புட்டண்ணாவால் காலியான, பெங்களூரு ஆசிரியர் தொகுதிக்கு வரும் 16ல் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. காங்கிரஸ் வேட்பாளராக புட்டண்ணாவும், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வேட்பாளராக அக்கட்சியின் சட்டப்பிரிவு தலைவர் ரங்கநாத்தும் போட்டியிடுகின்றனர். 2020 தேர்தலில், புட்டண்ணா பா.ஜ., சார்பிலும், ரங்கநாத் ம.ஜ.த., சார்பிலும் போட்டியிட்டனர். புட்டண்ணாவுக்கு அதிர்ஷ்டம் அடித்தது.
இம்முறையும் இவர்களே எதிராளிகளாக களத்தில் உள்ளனர். தங்களின் வேட்பாளரை வெற்றி பெற வைக்க, காங்கிரசும், கூட்டணி கட்சிகளும் முயற்சிக்கின்றனர்.
பெங்களூரு ஆசிரியர் தொகுதி, பெங்களூரு நகர், பெங்களூரு ரூரல், மாநகராட்சி, வடக்கு, சென்ட்ரல், தெற்கு பகுதிகளுடன், ராம்நகர் மாவட்டத்தை உட் கொண்டுள்ளது. ஆசிரியர்கள் வாக்களார்களாக உள்ள இந்த தொகுதியில், 2002ல் புட்டண்ணா போட்டியிட்டார். முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றார். அதன்பின் 2008 மற்றும் 2014ல் ம.ஜ.த., சார்பில் வெற்றி பெற்றார். 2020ல் ம.ஜ.த.,விலிருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்து நான்காவது முறை போட்டியிட்ட போதும், அவருக்கே ஆசிரியர்களின் ஆதரவு கிடைத்தது.
ஆசிரியர் சங்கங்கள், கல்வி நிறுவனங்களுடன் நெருக்கமாக இருந்த இவர், சொந்த பலத்தில் வெற்றி பெற்றார். தொகுதியில் ம.ஜ.த.,வை நிலையூன்ற செய்தார். வெவ்வேறு கட்சிகளின் சார்பில் போட்டியிட்டும், அவரை ஆசிரியர்கள் கைப்பிடித்தனர்.
சட்ட மேலவையில் எளிதாக நுழைய முடிந்த புட்டண்ணாவால், சட்டசபையில் நுழைய முடியவில்லை. ராஜாஜி நகர் சட்டசபை தொகுதியில் தோற்ற இவர், மீண்டும் சட்ட மேலவைக்கு செல்ல முயற்சிக்கிறார். அதிர்ஷ்டம் கை கொடுக்குமா என்பது, பிப்ரவரி 11ல் தெரியும்.
பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வேட்பாளராக களமிறங்கியுள்ள ரங்கநாத், ம.ஜ.த.,வின் செல்வாக்கை மீண்டும் கொண்டு வர, ஆர்வம் காண்பிக்கிறார். புட்டண்ணாவை தோற்கடிக்க முயற்சிக்கிறார்.
ம.ஜ.த.,வை விட்டு வந்த இவருக்கு, சீட் கொடுத்து வெற்றி பெற வைத்தும், பதவி காலம் முடிவதற்கு முன்பே ராஜினாமா செய்துவிட்டு, காங்கிரசுக்கு தாவிய புட்டண்ணாவை தோற்கடித்து பாடம் புகட்ட, பா.ஜ., தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
காங்., வேட்பாளர் புட்டண்ணா வாக்குறுதிகள்:
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி, கல்லுாரிகளின் ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதிய ஆயோக் சிபாரிசுகளை, விரைந்து செயல்படுத்தப்படும். 2006ன் ஏப்ரலுக்கு பின், நியமிக்கப்பட்டவர்களுக்கு பழைய பென்ஷன் நடைமுறை நீடிக்கப்படும்.
தனியார் பள்ளி, கல்லுாரிகளுக்கு மருத்துவ சிகிச்சை காப்பீடு செயல்படுத்தப்படும். 1995 முதல் 2000 இடையிலான காலத்தில் துவக்கப்பட்ட கன்னட பள்ளிகளுக்கும், நிதியுதவி கிடைக்க முயற்சிப்பேன்.
ம.ஜ.த., - பா.ஜ., கூட்டணி வேட்பாளர் ரங்கநாத் வாக்குறுதிகள்:
தனியார் பள்ளி, கல்லுாரிகளின் ஆசிரியர்களுக்கும், மருத்துவ சிகிச்சை காப்பீடு வசதி கொண்டு வரப்படும்.
பதவி உயர்வு கிடைக்க செய்வோம். ஆசிரியர்களுக்கு இடையில் உள்ள ஊதிய பாரபட்சத்தை நிவர்த்தி செய்வோம்.
ஆசிரியர் நலன் நிதி நல்ல முறையில் பயன்படுத்தப்படும். அனைத்து ஊழியர்களுக்கும் ஜோதி சஞ்சீவினி உட்பட, பல திட்டங்கள் செயல்படுத்தப்படும்.