பெங்களூரு மாநகராட்சி தேர்தல் வாக்குறுதியை மறந்த காங்., அரசு
பெங்களூரு மாநகராட்சி தேர்தல் வாக்குறுதியை மறந்த காங்., அரசு
பெங்களூரு மாநகராட்சி தேர்தல் வாக்குறுதியை மறந்த காங்., அரசு
ADDED : ஜன 11, 2024 11:38 PM
பெங்களூரு: கர்நாடகாவின் பெரும்பாலான நகரங்களில், மேயர், துணை மேயர் உள்ளனர். ஆனால் பெங்களூரு மாநகராட்சியில், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக, மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல், அதிகாரிகள், 'தர்பார்' நடக்கிறது. இந்த விஷயத்தில், காங்கிரஸ் அளித்துள்ள வாக்குறுதி பொய்த்துள்ளது.
பெங்களூரு மாநகராட்சியில், 2020 செப்டம்பர் 10ல் மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி காலம் முடிவடைந்தது. அன்று முதல் இன்று வரை, மாநகராட்சி மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல், அதிகாரிகள் ஆட்சி நடத்துகின்றனர்.
மக்களின் பிரச்னைகளை எம்.எல்.ஏ.,க்களும், எம்.பி.,க்களும் தீர்த்து வைக்கின்றனர். பெங்களூரு மாநகராட்சியில், மக்கள் பிரதிநிதிகள் ஆட்சி காலம் முடிந்த பின், தேர்தல் நடத்துவதில் அன்றைய பா.ஜ., அரசு ஆர்வம் காண்பிக்கவில்லை.
அப்போது கொரோனா தொற்று தீவிரமாக இருந்தது. இதை காரணம் காண்பித்து, மாநகராட்சிக்கு நிர்வாக அதிகாரியை நியமித்து, தேர்தல் நடத்துவதை கிடப்பில் போட்டது.
தேர்தல் நடத்தாமல் காலம் கடத்துவது குறித்து, அன்றைய எதிர்க்கட்சியான காங்கிரஸ், பா.ஜ., அரசை விமர்சித்தது. தேர்தலை நடத்தும்படி அரசுக்கு உத்தரவிட கோரி, சில முன்னாள் கவுன்சிலர்கள் உயர் நீதிமன்றத்தை நாடினர். உயர் நீதிமன்றமும் மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தும்படி, அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து, வார்டுகளை மறு சீராய்வு செய்வதாக கூறி, தேர்தல் நடத்த கால அவகாசம் பெற்றது.
அதன்பின் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு, வார்டுகள் மறு சீராய்வை 2023 செப்டம்பரில் முடித்தது. ஆனால் இட ஒதுக்கீடு பட்டியலை இன்னும் தயாரிக்கவில்லை.
பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் நடத்துவதில், காங்கிரஸ் அரசுக்கு ஆர்வம் இல்லை.
சட்டசபை தேர்தலுக்கு முன், காங்கிரஸ் அளித்திருந்த வாக்குறுதி அறிக்கையில், கட்சி ஆட்சிக்கு வந்தால் பெங்களூரு மாநகராட்சிக்கு ஜனவரிக்குள் தேர்தல் நடத்தப்படும் என, வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து ஏழு மாதங்கள் கடந்தும், அதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை.
லோக்சபா தேர்தல் நெருங்குகிறது. விரைவில் தேர்தல் விதிமுறை அமலுக்கு வரலாம். லோக்சபா தேர்தலுக்கு காங்கிரஸ் அரசு காண்பிக்கும் ஆர்வத்தை, பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் காண்பிக்கவில்லை.
முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உட்பட, மற்ற தலைவர்கள், லோக்சபா தேர்தலுக்கு தயாராகின்றனரே தவிர, யாரும் மாநகராட்சி தேர்தல் பற்றி, வாய் திறக்கவே இல்லை. இதனால், காங்கிரஸ் அளித்த வாக்குறுதி பொய்த்துள்ளது.