லோக் ஆயுக்தாவிடம் முதல்வர் சித்தராமையா மீது புகார்! : மைசூரு நில ஒதுக்கீடு வழக்கில் 400 பக்க ஆவணம் சமர்ப்பிப்பு
லோக் ஆயுக்தாவிடம் முதல்வர் சித்தராமையா மீது புகார்! : மைசூரு நில ஒதுக்கீடு வழக்கில் 400 பக்க ஆவணம் சமர்ப்பிப்பு
லோக் ஆயுக்தாவிடம் முதல்வர் சித்தராமையா மீது புகார்! : மைசூரு நில ஒதுக்கீடு வழக்கில் 400 பக்க ஆவணம் சமர்ப்பிப்பு
ADDED : ஜூலை 21, 2024 07:29 AM

பெங்களூரு: மைசூரு 'மூடா'வில் நடந்த நில முறைகேட்டில் முதல்வர் சித்தராமையா மற்றும் அதிகாரிகளுக்கு உள்ள தொடர்புக்குரிய 400 பக்கங்கள் கொண்ட ஆவணங்களுடன், பெங்களூரு பா.ஜ., பிரமுகர் ரமேஷ், லோக் ஆயுக்தாவில் புகார் செய்துள்ளார்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு நடக்கிறது.
சித்தராமையாவின் சொந்த ஊரான மைசூரில் உள்ள, 'மூடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில், பயனாளிகளுக்கு நிலம் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக, எதிர்க்கட்சியான பா.ஜ., குற்றஞ்சாட்டியது.
நில முறைகேட்டில் சித்தராமையா, நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் பைரதி சுரேஷ் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாகவும், 4,000 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருப்பதாகவும், பா.ஜ., தலைவர்கள் கூறினர்.
விசாரணை
முதல்வரின் மனைவி பார்வதிக்கும், சட்டவிரோதமாக நிலம் ஒதுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. 'மூடா'வில் நடந்ததாக கூறப்படும் முறைகேடு குறித்து, இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தலைமையிலும் விசாரணை நடக்கிறது.
பெங்களூரு விதான் சவுதா அருகே உள்ள, கர்நாடக லோக் ஆயுக்தா தலைமை அலுவலகத்திற்கு, பெங்களூரு பா.ஜ., பிரமுகர் ரமேஷ் நேற்று சென்றார்.
'மூடா'வில் நடந்த முறைகேட்டில் முதல்வர் சித்தராமையா மற்றும் அதிகாரிகளுக்கு உள்ள தொடர்புக்கு ஆதாரமாக 400 பக்க ஆவணங்களுடன் புகார் அளித்தார்.
இந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
முறைகேடு
இதன்பின்னர் ரமேஷ் அளித்த பேட்டி:
கடந்த 1997 - 1998ல் ஜே.எச்., படேல் முதல்வராக இருந்தபோது, சித்தராமையா துணை முதல்வராக இருந்தார். அப்போது அவர், தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மைசூரு தேவனுார் லே-அவுட்டை 'மூடா'விடம் ஒப்படைக்க முயற்சி செய்தார்.
கடந்த 2022ல் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, மைசூரு விஜயநகரில் 14 வீட்டு மனைகளை அவரது மனைவி பார்வதி பெயரில் பதிவு செய்தார்.
தற்போது முதல்வராக இருந்து கொண்டு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, 'மூடா'வில் முறைகேடுகள் நடக்க துணை போய் உள்ளார். ஆனால், பழியை எங்கள் கட்சி மீது போட பார்க்கிறார்.
'மூடா' முறைகேடு தொடர்பாக சித்தராமையா, முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது ஆவணங்களுடன் 400 பக்கத்தில் புகார் அளித்துள்ளேன். இந்த புகாரின் மீது லோக் ஆயுக்தா உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கிலி
கடந்த 2013 - 2018ல் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்தும், லோக் ஆயுக்தாவில் அடிக்கடி புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ரமேஷ்.
கடந்த சட்டசபை தேர்தலில் பசவனகுடி தொகுதியில் போட்டியிட சீட் எதிர்பார்த்தார். ஆனால் சீட் கிடைக்காததால் அதிருப்தியில் இருந்தார்.
தங்கள் அரசுக்கு எதிராக புகார் அளிப்பார் என்பதால், ரமேஷை காங்கிரசுக்கு இழுக்க முயற்சிகள் நடந்தன. ஆனால் அவர் அக்கட்சியினர் வலையில் சிக்கவில்லை.
கடந்த ஓராண்டுக்கு மேலாக பொறுமையாக இருந்த ரமேஷ், தற்போது அரசு செய்யும் முறைகேடுகள் குறித்து, புகார் அளிக்க ஆரம்பித்திருப்பது, ஆளும் கட்சியினருக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது.