பாக்.,கில் ஆட்சி அமைப்பதில் இழுபறி பிரதமர் பதவியை பெறுவதில் போட்டி
பாக்.,கில் ஆட்சி அமைப்பதில் இழுபறி பிரதமர் பதவியை பெறுவதில் போட்டி
பாக்.,கில் ஆட்சி அமைப்பதில் இழுபறி பிரதமர் பதவியை பெறுவதில் போட்டி
ADDED : பிப் 12, 2024 12:26 AM
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பொது தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி, பிற கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகிறது.
பிலாவல் புட்டோவின் பாக்., மக்கள் கட்சி, பிரதமர் பதவி கேட்டு பிடிவாதம் பிடிப்பதால் பரபரப்பு நிலவுகிறது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், 265 இடங்களுக்கு கடந்த 8ம் தேதி தேர்தல் நடந்தது. இதில், 264 தொகுதிகளின் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.
அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி, ஊழல் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சி ஆதரவு சுயேச்சை வேட்பாளர்கள், 101 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
நவாஸ் ஷெரீப் கட்சி 75 இடங்களையும், முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவின் மகன் பிலாவல் புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களையும் வென்றுள்ளன.
முத்தாஹிதா கவுமி இயக்கம் 17 இடங்களை கைப்பற்றியுள்ளது. மீதி உள்ள இடங்களை சிறிய கட்சிகள் கைப்பற்றியுள்ளன. ஆட்சி அமைக்க 133 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இந்த நிலையில், கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக பாக்., மக்கள் கட்சியுடன், பாக்., முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியினர் நேற்று பேச்சு நடத்தினர். அப்போது, அவர்கள் தரப்பில் பிரதமர் பதவி வேண்டும் என கோரியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, முத்தாஹிதா கவுமி இயக்கத்தினருடன் நவாஸ் ஷெரீப் தரப்பினர் நடத்திய பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இரு கட்சிகளும், மேலும் பல சுயேச்சைகளுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இம்ரான் கான் ஆதரவாளர்களும், சிறிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆலோசனை செய்து வருகின்றனர்.