'லோக்சபா தேர்தலுக்கு முன் குடியுரிமை சட்டம் அமலாகும்'
'லோக்சபா தேர்தலுக்கு முன் குடியுரிமை சட்டம் அமலாகும்'
'லோக்சபா தேர்தலுக்கு முன் குடியுரிமை சட்டம் அமலாகும்'
ADDED : பிப் 10, 2024 11:25 PM

புதுடில்லி, ''குடியுரிமை திருத்த சட்டம், லோக்சபா தேர்தலுக்கு முன்பாக நடைமுறைக்கு வரும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டார்.
புதுடில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசியதாவது:
சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம், 2019ல் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது. இது, வரும் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக நடைமுறைக்கு வரும்.
இந்த விஷயத்தில், முஸ்லிம்களுக்கு தவறாக தகவல்கள் தெரிவித்து, அவர்களை திசை திருப்பி உள்ளனர்.
பொது சிவில் சட்டம்
சி.ஏ.ஏ., என்பது, நம் அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து, அங்கு ஒடுக்கப்பட்டதால், நம் நாட்டுக்கு வந்த வர்களுக்கு குடியுரிமை வழங்குவதாகும்.
இது யாருடைய இந்திய குடியுரிமையையும் பறிக்கவில்லை. மாறாக, அண்டை நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குகிறது.
பொது சிவில் சட்டம் என்பது நம் அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் முதல் பிரதமர் நேரு மற்றும் மற்றவர்களால் கையெழுத்திடப்பட்ட ஒன்று.
ஆனால், குறிப்பிட்ட மதத்தினரை திருப்திபடுத்தும் அரசியல் நோக்கத்துக்காக, காங்கிரஸ் இதை நடைமுறைபடுத்தவில்லை.
தற்போது, உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இது சமூக மாற்றத்தை ஏற்படுத்தும்.
இது தொடர்பாக அனைத்து தரப்பினருடன் பேசி, நாடு முழுதும் பயன்படுத்துவோம். ஒரு மதச்சார்பற்ற நாட்டில், மதத்தின் அடிப்படையில் தனிநபர் சட்டங்கள் இருக்க முடியாது.
வெற்றி நிச்சயம்
லோக்சபா தேர்தலில், பா.ஜ., 370 தொகுதிகளிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி, 400க்கும் மேற்பட்ட இடங்களிலும் வெற்றி பெறுவது நிச்சயம். இதை நாட்டு மக்களும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் கூறுகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.