
கனமான கதாபாத்திரம்
நடிகர் விஜய ராகவேந்திரா நடிப்பில், கேஸ் ஆப் கொண்டன்னா படம் திரைக்கு வர தயாராக உள்ளது. போலீஸ் அதிகாரியாக அவர் நடிக்கிறார். இதுகுறித்து, அவர் கூறுகையில், ''தற்போது நான்காவது முறையாக, காக்கி சீருடை அணிந்துள்ளேன். முந்தைய படங்களை விட, இந்த படத்தில் மாறுபட்ட கதாபாத்திரம். எந்த நடிகனும் மனம் போனபடி கதாபாத்திரங்களை ஏற்பது இல்லை.
''மசாலா படங்களை தவிர்த்து, சங்கர் நாக், தேவராஜ் போன்ற நடிகர்களை போன்று, மக்கள் மனதில் இடம் பிடிக்கும் கதை, கதாபாத்திரங்களில் நடிக்கவே நான் விரும்புகிறேன். போலீசாரை காமெடியனாக காண்பிக்கும் படங்களில் நடிக்க, எனக்கு விருப்பமில்லை. இப்போது நான் ஏற்றுள்ள வேடமும், கனமான கதாபாத்திரம் தான்,'' என்றார்.
வெள்ளித்திரையில் ஆர்வம்
'ஹிட்லர் கல்யாண்' என்ற சின்னத்திரை தொடர் வாயிலாக, நடிகையாக பயணத்தை தொடர்ந்த மலைகா வசுபால், தற்போது வெள்ளித்திரையில் நுழைந்துள்ளார். இதுகுறித்து, அவரிடம் கேட்ட போது, ''சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது, என் நீண்ட நாள் கனவு. விருது நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள், எனக்குள் ஆர்வத்தை ஏற்படுத்தியது.
''என் பெற்றோரின் விருப்பப்படி பொறியியல் பட்டப்படிப்பை முடித்து, அவர்களின் கனவை நிறைவேற்றினேன். இப்போது என் கனவில் ஆர்வம் காண்பிக்கிறேன். சின்னத்திரை தொடருக்காக, முதன்முதலாக கேமரா முன் நின்றேன். அந்த அனுபவம், எனக்கு சினிமாவில் பெரிதும் உதவுகிறது. இப்போது சிக்கண்ணாவுக்கு ஜோடியாக, உபாத்யாக்ஷா வில் நடிக்கிறேன்,'' என்றார்.
அறிவியல், திரில்லர்
எத்திராஜ் இயக்கும், சத்யம் சிவம் பிப்ரவரி 2ல், மாநிலம் முழுதும் திரையிடப்படுகிறது. இது பற்றி இயக்குனர் கூறுகையில், ''மாறுபட்ட கதை கொண்ட, சத்யம் சிவம் வரும் வாரம் திரைக்கு வருகிறது. இதை தயாரிக்கும் புல்லட் ராஜு, நாயகனாகவும் நடித்துள்ளார்.
''சஞ்சனா நாயுடு நாயகியாக நடிக்கிறார். அறிவியல், சென்டிமென்ட்ஸ், திரில்லர் என, அனைத்தும் படத்தில் உள்ளது. படத்துக்கு சென்சார் போர்டு, யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது. தயாரிப்பாளர் புல்லட் ராஜு, ஏற்கனவே பிக்ஷுகா என்ற படத்தை தயாரித்திருந்தார். தற்போது இரண்டாவது படத்தை தயாரித்துள்ளார்,'' என்றார்.
அதிர்ஷ்டம்
ரிஷப் ஷெட்டி நடிப்பில், ஹரிகதே அல்ல கிரிகதே மூலமாக, கன்னட திரையுலகில் நுழைந்த தபஸ்வினி பூனச்சா, தற்போது கஜராமா படம் வெளியாக காத்திருக்கிறார்.
இது குறித்து, அவர் கூறுகையில், ''திரையுலகுக்கு நான் புதியவர். கஜராமா எனக்கு இரண்டாவது படமாகும். ரிஷப் ஷெட்டியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது, என் அதிர்ஷ்டம். இதில் ஆக்ஷன், சென்டிமென்ட்ஸ் காதல் என, ரசிகர்கள் விரும்பும் அனைத்தும் உள்ளது. என்னை நான், திரையில் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். நடிப்பு திறனை வெளிப்படுத்த வாய்ப்புள்ள படம்,'' என்றார்.
நிஜ ஆசை நிறைவேற்றம்
கன்னடத்தில் அதிக படங்களை, கையில் வைத்துள்ள நடிகைகளில் நடிகை அதிதி பிரபுதேவ் ஒருவர். இதுவரை கிளாமர் கதாபாத்திரங்களில் நடித்து, இளசுகளை கிறங்கடித்த இவர், இப்போதே முதன் முறையாக, ஆக்ஷன் படத்தில் தோன்றுகிறார்.
இது குறித்து, அவரிடம் கேட்ட போது, ''என் நடிப்பில், அலெக்சா திரைக்கு வந்துள்ளது. இந்த படம் எனக்கு புதிய அனுபவத்தை கொடுத்தது. இதில் நான் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளேன். நிஜ வாழ்வில் போலீஸ் துறையில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. அந்த ஆசை, இப்போது நிறைவேறி விட்டது. படத்தில் சண்டை காட்சிகள் வித்தியாசமாக உள்ளது, ரவி வர்மா, வினோன் எனக்கு பயிற்சி அளித்தனர்,'' என்றார்.
அராஜகங்களுக்கு எதிர்ப்பு
பிரஜ்வல் தேவராஜ், மேகா ஷெட்டி இணைந்து நடிக்கும், சீதா படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடக்கிறது.
இப்படத்தை நடன இயக்குனர் ராஜா கலைகுமார் கூறுகையில், ''கடந்த 23 ஆண்டுகளாக, கன்னட திரையுலகில் டான்சராக, டான்ஸ் மாஸ்டராக பணியாற்றுகிறேன். இது நான் இயக்கும், முதல் படமாகும். மார்க்கெட்டில் பிறந்து, வளரும் இளைஞனின் கதை. நடிகர் பிரஜ்வல் தேவராஜ், மார்க்கெட்டில் நடக்கும் அராஜகங்களை எதிர்த்து போராடும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்,'' என்றார்.