Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/சினி கடலை

சினி கடலை

சினி கடலை

சினி கடலை

ADDED : ஜன 11, 2024 11:26 PM


Google News
Latest Tamil News
கல்லுாரி மாணவி கேரக்டர்!

நடிகை லியோனெல்லா ஸ்வேதா டிசோசா, தட்சிணகன்னடா மங்களூரை சேர்ந்தவர். 'தி ஒய்' என்ற பாலிவுட் படம் மூலமாக, திரையுலகில் நுழைந்த இவர், தற்போது அடுத்தடுத்த கன்னட படங்களில் பிசியாக நடிக்கிறார். 'ஹெஜ்ஜாரு , நெல்சன், சார்வஜனிகரிகே சுவர்ணாவகாஷா' உட்பட, நான்கைந்து படங்களில் நடிக்கிறார்.

'ஹெஜ்ஜாரு' படப்பிடிப்பு முடிந்துள்ளது. திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது. 'நெல்சன்' முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இது 1990ல் சாம்ராஜ்நகரில் நடந்த உண்மை சம்பவத்தை, மையமாக கொண்டது. இதில் கிராமத்து பெண்ணாக ஸ்வேதா டிசோசா நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத புதிய படம் ஒன்றில், 17 வயது கல்லுாரி மாணவியாக நடிக்கிறாராம்.

கன்னடத்தில் விஜய் சேதுபதி!

நடிகர் துருவா சர்ஜா நடிப்பில், பிரேம் இயக்கத்தில் தயாராகும், 'கேடி - தி டெவில்' பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் டீசர் வெளியிடப்பட்டது. இதில் நடிகர்கள் ரவிசந்திரன், ரமேஷ் அரவிந்த் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நீண்ட இடைவெளிக்கு பின், பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, கன்னடத்துக்கு திரும்பியுள்ளார்.

தற்போது படத்தை பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழின் பிரபல நடிகர் விஜய் சேதுபதி, 'கேடி - தி டெவில்' படத்தில் நடிக்கிறார். படத்தின் முதல் பாகத்தில், கிளைமாக்சில் ஒரு கதாபாத்திரத்திலும், இரண்டாம் பாகத்தில், முக்கியமான கதாபாத்திரத்திலும் நடிப்பாராம். விரைவில் உலகம் முழுதும் திரையிட, படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

புதுமுக நாயகன் அறிமுகம்!

'சஹரா' படத்தின் மூலம், கன்னட திரையுலகில் இயக்குனராக அறிமுகமான மஞ்சேஷ் பாகவத், தற்போது 'கனசொந்து சுருவாகிதே' என்ற படத்தை இயக்குகிறார். தயாரிப்பாளர் அஸ்வினி புனித் ராஜ்குமார் டைட்டிலை வெளியிட்டு, படக்குழுவினரை வாழ்த்தினார். இதில் புதுமுகம் சந்தோஷ் பில்வா என்பவர், நாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக சாத்விகா நடிக்கிறார். திரில்லர் மஞ்சு, குரி சுனில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இது சஸ்பென்ஸ், திரில்லிங் கதை கொண்டதாகும். பெங்களூரு, குந்தாபுரா, குனிகல் சுற்றுப்புறத்தில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

ரூ.400க்கு 2 படங்கள்!

'ஹதினேளென்டு, கோளி எசரு' ஆகிய இரண்டு படங்கள், ஜனவரி 26ல் திரைக்கு வருகின்றன. ஏற்கனவே இந்த இரு படங்களும், பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, விமர்சகர்களிடம் நல்ல கருத்துகளை பெற்றுள்ளன. கடந்தாண்டு பெங்களூரு திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.

மல்ட்டி பிளக்ஸ்களில் படம் திரையிடப்படுகிறது. இவ்விரு படங்களையும், 400 ரூபாய் டிக்கெட் வாங்கி பார்க்க, படக்குழுவினர் வாய்ப்பளித்துள்ளனர். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இரண்டு படக்குழுவினரும் சேர்ந்து பிரசாரம் செய்கின்றனர். 400 ரூபாய்க்கு இரண்டு படங்களை பார்க்க விரும்புவோர், paraspara.live இணையதளம் வழியாக டிக்கெட் வாங்கலாம். உடுப்பி, மைசூரில் அதிகமானோர் டிக்கெட் வாங்கியுள்ளனர்.

காத்திருக்கும் ராகினி திரிவேதி!

நடிகை ராகினி திரிவேதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும், 'இ மெயில்' படத்தின் முதல் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது கன்னடம் மற்றும் தமிழ் மொழிகளில் தயாராகியுள்ளது. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாகும். படப்பிடிப்பு முடிந்துள்ளது. விரைவில் திரைக்கு கொண்டு வர, படக்குழுவினர் ஏற்பாடு செய்கின்றனர். கர்நாடகா, தமிழகம், புதுச்சேரி, கோவா, மும்பையில் படப்பிடிப்பு நடந்துள்ளது. மாறுபட்ட கதை கொண்டதாலும், தனக்கு முக்கியத்துவம் உள்ளதாலும் படம் எப்போது திரைக்கு வரும் என, ரசிகர்களை போன்று, ராகினி திரிவேதியும் ஆவலோடு காத்திருக்கிறார்.

3 குழந்தைகளுடன் சிந்து மேனன்!

நடிகர் தேவராஜ் நடித்த, 'ஹுலியா' படத்தில், குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த நடிகை சிந்து மேனன், வளர்ந்த பின் சுதீப்புடன், நந்தி, தர்ஷனுடன் 'தர்மா' படங்களில் நடித்தார். கன்னடம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். மோகன்லால், ஜெயராம், மம்முட்டி போன்ற ஸ்டார் நடிகர்களுடன் நடித்தவர். புகழின் உச்சியில் இருக்கும் போதே, நடிப்புக்கு முழுக்கு போட்டு 2010ல் டொமினிக் பிரபுவை திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் உள்ளனர். இந்த படத்தை, சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us