
விரைவில் போட்டோ அப்லோட்
நடிகர் துனியா விஜயின் குடும்ப வாழ்க்கை, சர்ச்சைக்குரிய பொருளாக உள்ளது. மனைவி, மூன்று பிள்ளைகள் இருக்கும் நிலையில், மாடலும், நடிகையுமான கீர்த்தியை, விஜய் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கும், கீர்த்திக்கும் தற்போது மன விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சினிமா நிகழ்ச்சிகள், படப்பிடிப்பு இடங்களில் கீர்த்தி தென்படுவதில்லை. தன் இன்ஸ்டாகிராமில் விஜயின் ஒரு போட்டோவும் இல்லாமல் பார்த்துக்கொள்கிறார். பீமா பட பிரசாரத்திலும் இவர் இல்லை. இது ரசிகர்களுக்கு வருத்தமளித்துள்ளது.
இது குறித்து கீர்த்தியிடம் கேட்ட போது, ''ரசிகர்கள் என் மீது வைத்துள்ள அன்புக்கு நன்றி. விரைவில் போட்டோ அப்லோட் செய்வேன். என்னை பற்றியும், என் இசை பயணத்தை பற்றியும் விவரிப்பேன்,'' என்றார்.
குடும்ப படத்தில் தர்ஷன்
நடிகர் தர்ஷன் நடிப்பில், திரைக்கு வந்த காட்டேரா சூப்பர்ஹிட்டாக ஓடுகிறது. இதுவரை ஆக்ஷன் படங்களில் கலக்கிய தர்ஷன், இப்போதே முதன் முறையாக குடும்ப படத்தில் நடித்துள்ளார். 1974ல் நடந்த உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு தயாரானது. முன்னாள் பிரதமர் இந்திரா அமல்படுத்திய நில மேம்பாடு சட்டத்தை நினைவூட்டுகிறது. உழுபவனே நிலம் சொந்தம் என்ற அம்சத்தை உட்கொண்டது. லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு உதவியாக இருந்தது. இதனால் படம் ரசிகர்களை ஈர்த்துள்ளது.
படம் பார்த்த பெண்ணொருவர் கூறுகையில்,''படம் நன்றாக உள்ளது. முந்தைய தினங்களை நினைவூட்டுகிறது. நான் சிறுமியாக இருந்த போது, அனைத்து சொத்துக்களும் பணக்காரர்களிடம் இருந்தது. நமக்கு எதுவும் கொடுக்கவில்லை. ஆனால் இந்திரா, ஏழைகளுக்கு பகிர்ந்தளித்தார். படத்தில் சமூகத்துக்கு தேவையான, நல்ல விஷயங்கள் உள்ளன,'' என்றார்.
ஐந்து மொழிகளில் 'யுஐ' படம்
ஓம், ஷ், சூப்பர் உட்பட, பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய நடிகர் உபேந்திரா, எட்டு ஆண்டுகளுக்கு பின், பட இயக்கத்துக்கு வந்துள்ளார். யுஐ என்ற படத்தை இயக்குகிறார். எந்த காட்சிகளையும் காண்பிக்காமல், வெறும் குரல் மட்டுமே உள்ள படத்தின் டீசரை, சமீபத்தில் வெளியிட்டு, ரசிகர்களின் ஆர்வத்தை துாண்டியுள்ளார். நாளை, படத்தின் முதல் போஸ்டரை வெளியிடவுள்ளார்.
படக்குழுவினர் கூறுகையில், ஏற்கனவே படப்பிடிப்பு முடிந்துள்ளது. ஐந்து மொழிகளில் திரைக்கு வரும். ஏற்கனவே பல வெற்றி படங்களை கொடுத்துள்ள உபேந்திரா, இந்த படத்திலும் தன் கை வரிசையை காண்பித்துள்ளார். மனோகரன், ஸ்ரீகாந்த் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளனர், என்றனர்.
திருமணம் நடந்தே தீரும்
நடிகை சங்கீதா சிருங்கேரி, 'என் வாழ்க்கையில் திருமணமே செய்து கொள்ளமாட்டேன்,' என உறுதி பூண்டுள்ளார். ஆனால் இவருக்கு 2025ல் திருமணம் கட்டாயம் நடக்கும் என, வித்யா சங்கரானந்த சரஸ்வதி குரூஜி ஆரூடம் கணித்துள்ளார். சங்கீதா சிருங்கேரி தற்போது, பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். பிக்பாஸ் வீட்டுக்கு விருந்தினராக வந்திருந்த சங்கரானந்த சரஸ்வதி குரூஜி, சங்கீதாவிடம், உங்கள் மனதின் துயரத்தை போக்கக்கூடிய நபர், உங்கள் வாழ்க்கையில் வருவார். தொழில் வாழ்க்கையில், ஏற்ற, இறக்கம் இருக்கும். 2025ல் உங்கள் திருமணம் நடந்தே தீரும்,' என ஆரூடம் கணித்துள்ளார்.
கிராபிக்ஸ் பயன்படுத்துவோம்
ராஜ்குமார், லீலாவதி, பாரதி விஷ்ணு வர்த்தன் நடித்த புராண திரைப்படம் கங்கா கவுரி கடந்த 1967ல் திரைக்கு வந்தது. 57 ஆண்டுக்கு பின் இதே பெயரில், இயக்குனர் புருஷோத்தம் ஓம்கார், புதிய படத்தை இயக்குகிறார். சமீபத்தில் பட பூஜை நடந்தது.
இயக்குனர் கூறுகையில், ''இதுவரை 27 படங்கள் இயக்கியுள்ளேன். இவற்றில் 24 புராண படங்களாகும். பிரம்ம லோகம், சொர்க்க லோகம் காட்சிகளுக்கு செட்டுகள் மற்றும் கிராபிக்ஸ் பயன்படுத்துவோம். சிவனாக கணேஷ் ராவ், பார்வதியாக ரூபாலி, கங்காவாக நிகிதா சாமி நடிக்கின்றனர்,'' என்றார்.
ஷிரத்தா மார்பில் டாட்டூ
மாறுபட்ட கதைகளம் கொண்ட, யு டர்ன் படத்தில் அறிமுகமான நடிகை ஷிரத்தா ஸ்ரீநாத், தற்போது அடுத்தடுத்த படங்களை கையில் வைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் வாய்ப்புகளை அள்ளுகிறார். இவரது நடித்துள்ள தெலுங்கு படம், பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. கன்னடத்தில் ஒன்றிரண்டு படங்களை கையில் வைத்துள்ளார். ஷிரத்தா தன் மார்பில் டாட்டூ போட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ''என் 18வது வயதில் என் ஆசைக்காக டாட்டூ போட்டுக்கொண்டேன். நான் போட்டுள்ள டாட்டுவின் அர்த்தம் அன்பு. இசை சம்பந்நபட்டது,'' என்றார்.