சிக்கபல்லாபூரில் அமைச்சர் - காங்., - எம்.எல்.ஏ., 'லடாய்'
சிக்கபல்லாபூரில் அமைச்சர் - காங்., - எம்.எல்.ஏ., 'லடாய்'
சிக்கபல்லாபூரில் அமைச்சர் - காங்., - எம்.எல்.ஏ., 'லடாய்'
ADDED : ஜன 31, 2024 07:33 AM

சிக்கபல்லாபூர் : சிக்கபல்லாபூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சுதாகருக்கும், காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வருக்கும் 'பனிப்போர்' நாளுக்கு நாள் முற்றுவதால், காங்கிரஸ் மேலிடத்துக்கு கூடுதல் தலைவலி ஏற்பட்டுள்ளது.
சிக்கபல்லாபூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர். இவர், பா.ஜ., தலைவர்களை கடுமையாக விமர்சிக்கிறார். சில நேரங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி, பரபரப்பை ஏற்படுத்தினார். காங்., மேலிடம் தலையிட்டு, இவரது 'வாய்க்கு பூட்டு' போட்டது.
இந்நிலையில் இவருக்கும், உயர் கல்வித்துறை அமைச்சரும், சிக்கபல்லாபூர் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான எம்.சி.சுதாகருக்கும் பனிப்போர் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் தன்னை மதிப்பதில்லை. தொகுதி தொடர்பாக முடிவு எடுக்கும்போது, எம்.எல்.ஏ.,வான தன்னுடன் ஆலோசிக்காமல், தன்னிச்சையாக முடிவு எடுப்பதாக, பிரதீப் ஈஸ்வர் கொதிப்படைந்துள்ளார்.
புறக்கணிப்பு
அமைச்சர் தலைமையில் நிகழ்ச்சி, கூட்டங்கள் நடந்தாலும் புறக்கணிக்கிறார். ஜனவரி 24ல், சிக்கபல்லாபூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாநில அளவிலான, பெஸ்காம் அதிகாரிகள் கூட்டம் நடந்தது. இதில் சிக்கபல்லாபூர் உட்பட மாவட்டத்தின் மின்சார பிரச்னைகள் குறித்து, ஆலோசனை நடந்தது.
பாகேபள்ளி, கவுரி பிதனுர் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி., பச்சேகவுடா பங்கேற்றனர். ஆனால் பிரதீப் ஈஸ்வர் தலை காண்பிக்கவில்லை.
சிக்கபல்லாபூரில் ஜனவரி 26ல் நடந்த, குடியரசு தின நிகழ்ச்சியில், அமைச்சர் கொடியேற்றினார். அதிலும் தொகுதி எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் பங்கேற்கவில்லை. யுவநிதி திட்டம், நந்திமலையில் ரோப் வே அமைப்பது குறித்து, பெங்களூரில் அமைச்சர் சுதாகர் கூட்டம் நடத்தினார். இதிலும் கூட அவர் பங்கேற்கவில்லை.
இவர்களின் மோதலுக்கு, ஜல்லி கிரஷர் காரணம் என, காங்கிரஸ், பா.ஜ., தலைவர்கள் கூறுகின்றனர். சிக்கபல்லாபூரின், மன்டிகல்லு, பெரசந்திரா கிராமங்களில் ஜல்லி கிரஷர்கள் செயல்படுகின்றன. இவைகள் மக்களின் ஆரோக்கியத்தை பாழாக்குவதுடன், சுற்றுச்சூழலையும் மாசு படுத்துகின்றன. எனவே இவற்றை மூடியே தீர வேண்டும் என, எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர், 2023ன் அக்டோபரில் சபதம் செய்திருந்தார். ஜல்லி கிரஷர்களை மூடும்படி வலியுறுத்தி, இவரது ஆதரவாளர்கள், தாலுகா அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர்.
ஆட்சேபனை
இதற்கு அமைச்சர் சுதாகர் ஆட்சேபனை தெரிவித்தார். 'சுரங்க தொழிலை முற்றிலுமாக மூட வேண்டும் என்பது சரியல்ல. விவேகமற்றது' என்றார்.
இதனால், அமைச்சர், எம்.எல்.ஏ., இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரின் மோதல் உச்ச கட்டத்தை எட்டும் விஷயம், வருவாய்த்துறை அமைச்சரின் கவனத்துக்கு சென்றது. அவர் தலையிட்டு சூழ்நிலை மோசமாகாமல் தவிர்த்தார். ஆனாலும் பனிப்போர் முடிவுக்கு வரவில்லை.
அமைச்சருடன் தனக்கு மனஸ்தாபம் இருப்பதை, எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் வெளிப்படையாக காண்பிக்கிறார். ஆனால் அமைச்சர் மழுப்பலாக முலாம் பூசுகிறார். எம்.எல்.ஏ., நிகழ்ச்சிகள், கூட்டத்துக்கு ஏன் ஆஜராவதில்லை என, ஊடகத்தினர் கேள்வி எழுப்பினால், 'எம்.எல்.ஏ.,வுக்கு வேறு நிகழ்ச்சி உள்ளது. என்னிடம் கூறி விட்டு சென்றார். இதற்காக முன் கூட்டியே அனுமதி பெற்றுள்ளார்' என ரெடிமேட் பதிலை சொல்லி சமாளிக்கிறார்.
சிக்கபல்லாபூர் மாவட்ட காங்கிரசில், 'பிரதீப் ஈஸ்வர் கோஷ்டி', 'மூத்த காங்கிரஸ் தலைவர்கள்' கோஷ்டி என்ற, இரண்டு கோஷ்டிகள் உள்ளன. எம்.எல்.ஏ.,வான பின், பிரதீப் ஈஸ்வர் மூத்த தலைவர்களை புறக்கணித்தார். தேர்தலில் இவருக்கு எதிராக செயல்பட்டவர்களை, தற்போது தன்னருகில் வைத்துள்ளார். தனக்காக பணியாற்றிய தலைவர்களை விலக்கி விட்டார். லோக்சபா தேர்தல் முடியட்டும். நாங்கள் யார் என காண்பிக்கிறோம் என, மூத்த தலைவர்கள் பொறுமுகின்றனர்.
சிக்கபல்லாபூர் மாவட்டத்தில், பனிப்போர் நாளுக்கு நாள் முற்றுவதால், காங்கிரஸ் மேலிடத்துக்கு கூடுதல் தலைவலி ஏற்பட்டுள்ளது.