'ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க சதி' முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 'பகீர்'
'ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க சதி' முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 'பகீர்'
'ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க சதி' முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 'பகீர்'
ADDED : ஜன 27, 2024 11:46 PM
புதுடில்லி: ''புதுடில்லியில், ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க, பா.ஜ., சதி செய்து வருகிறது. கட்சியில் இருந்து விலகினால், 25 கோடி ரூபாய் தருவதாக, எங்கள் கட்சியைச் சேர்ந்த ஏழு எம்.எல்.ஏ.,க்களிடம், அக்கட்சியினர் பேரம் பேசி உள்ளனர்,'' என, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக, சமூக வலைதளத்தில், புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று வெளியிட்ட பதிவு:
முறைகேடு
புதுடில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க, கடந்த ஒன்பது ஆண்டு களில் பா.ஜ., மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன.
இந்நிலையில் தற்போது மீண்டும் எங்கள் அரசை கவிழ்க்க அக்கட்சி சதி செய்து வருகிறது.
புதுடில்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், நான் கைது செய்யப்பட உள்ளதாக எச்சரித்து, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்களிடம், பா.ஜ.,வினர் பேரம் பேசி வருகின்றனர்.
இதன்படி, ஆம் ஆத்மியில் இருந்து வெளியேறினால், 25 கோடி ரூபாயும், அடுத்த தேர்தலில், பா.ஜ., சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதாகவும், ஏழு எம்.எல்.ஏ.,க்களிடம் பேரம் பேசி உள்ளனர்.
ஒன்றும் செய்ய முடியாது
ஆனால் இதை எங்கள் எம்.எல்.ஏ.,க்கள் முறியடித்து விட்டனர். மேலும், ஆம் ஆத்மியின் 21 எம்.எல்.ஏ.,க்களிடம் தொடர்பில் இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
பா.ஜ., என்ன செய்தாலும், எங்களை ஒன்றும் செய்ய முடியாது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.
பேரம் பேசப்பட்டதாக கூறப்படும் சம்பந்தப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்களின் பெயரை கெஜ்ரிவால் வெளியிட வேண்டும். அதை விடுத்து ஆதாரமில்லாமல் பேசக்கூடாது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை தனக்கு சம்மன் விவகாரத்தை திசை திருப்ப, கெஜ்ரிவால் முயற்சிக்கிறார்.
ஹரிஷ் குரானா
புதுடில்லி பா.ஜ., செயலர்