Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ கொண்டாட்டம்!  மோடி அரசு ஆட்சிக்கு வந்து 11 ஆண்டு நிறைவு: சிறப்பான ஏற்பாடுகளுக்கு பா.ஜ., தலைமை தயார்

கொண்டாட்டம்!  மோடி அரசு ஆட்சிக்கு வந்து 11 ஆண்டு நிறைவு: சிறப்பான ஏற்பாடுகளுக்கு பா.ஜ., தலைமை தயார்

கொண்டாட்டம்!  மோடி அரசு ஆட்சிக்கு வந்து 11 ஆண்டு நிறைவு: சிறப்பான ஏற்பாடுகளுக்கு பா.ஜ., தலைமை தயார்

கொண்டாட்டம்!  மோடி அரசு ஆட்சிக்கு வந்து 11 ஆண்டு நிறைவு: சிறப்பான ஏற்பாடுகளுக்கு பா.ஜ., தலைமை தயார்

UPDATED : ஜூன் 01, 2025 04:22 AMADDED : ஜூன் 01, 2025 03:26 AM


Google News
Latest Tamil News
மத்தியில் பா.ஜ., தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்து, 11 ஆண்டுகள் முடிவடைவதை கொண்டாடும் விதமாக சிறப்பான ஏற்பாடுகளை செய்யும்படி, கட்சியினருக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தலைமையிலான அமைச்சரவை, ஜனாதிபதி மாளிகையில் கடந்த ஆண்டு ஜூன் 9ல் மூன்றாவது முறையாக பதவியேற்றது.

மேலும், கடந்த 2014ல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மத்தியில் அமைந்து, தற்போது 11 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதை கொண்டாடும் விதமாக தங்கள் அரசின் சாதனைகளையும், பெருமைகளையும், பொதுமக்களிடம் விரிவாக எடுத்துச் செல்வதற்கு பா.ஜ.,தலைமை திட்டமிட்டு உள்ளது.

ஊடக சந்திப்பு


சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த சாதனை விளக்க நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து மூத்த அமைச்சர்களிடம் விளக்கினார்.

அப்போது, 'கடந்த ஓராண்டாக மத்திய அரசின் ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ளப்பட்ட முக்கிய முடிவுகள், சிறப்புத் திட்டங்கள், அவை நிறைவேற்றப்பட்ட விதம், அந்த துறையின் குறுகியகால மற்றும் நீண்டகால இலக்குகள் ஆகியவை குறித்த விரிவான திறனாய்வு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

'குறிப்பாக, கடந்த 11 ஆண்டுகளாக மத்திய அரசில் அமைச்சர்களாக நீடித்து வரும் பா.ஜ., மூத்த தலைவர்கள் அனைவருமே, அரசின் சாதனைகளை பட்டியலிடும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த தகவல்கள் அனைத்தும் விரிவாக ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரு கையடக்க புத்தகமாக அச்சிடப்பட்டு, நாடு முழுவதும் விநியோகிக்கப்பட வேண்டும்.

'மூத்த முக்கிய அமைச்சர்கள் அனைவரும் சாதனை விளக்க பொதுக் கூட்டங்களில் பங்கேற்பதோடு மட்டுமல்லாது ஊடக சந்திப்புகளையும் நடத்த வேண்டும்.

'தே.ஜ., கூட்டணி அரசுக்கும், இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த ஐ.மு., கூட்டணி அரசுக்கும் இடையிலான வேற்றுமைகளையும், அந்த அரசை விட, தற்போதைய அரசு எந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுகிறது' என்ற ஒப்பீட்டு தகவல்களையும் விளக்கிச் சொல்ல வேண்டும்' என, அறிவுறுத்தியுள்ளார்.

அரசின் சாதனை


பிரதமரின் அறிவுறுத்தலை அடுத்து அன்று இரவே, பா.ஜ., - எம்.பி.,க்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் ஆகியோருடன், பா.ஜ., தேசிய தலைவர் நட்டா ஆலோசனை நடத்தி, ஓராண்டு நிறைவு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கும்படி கேட்டுக்கொண்டார்.

மேலும், ஜூன் 5, சர்வதேச சுற்றுச்சூழல் தினம் என்பதால், பசுமையான சுத்தமான உலகத்தை நிர்மாணிப்பதில், இந்தியா அளித்து வரும் சர்வதேச கடமையை விளக்க நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய வேண்டும்.

அதேபோல 21ம் தேதி உலக சர்வதேச யோகா தினம். இதையொட்டி, ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்க உள்ளார்.

அதே நாளில், நாட்டின் பல்வேறு நகரங்களில் யோகா தின நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கலந்து கொள்வர். மூன்றாம் முறையாக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு, ஜூன் 9 அன்று, மத்திய அமைச்சர்கள் ஒவ்வொருவரும், மாநில தலைநகரங்களுக்கு செல்ல வேண்டும்.

அங்கு பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தி, மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும், அவை எவ்வாறு சிறப்பாக அமல்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றன என்பது குறித்தும், பொதுமக்களின் மனங்களை வென்றெடுக்கும் வகையில், விவரங்களோடு விளக்கிச் சொல்ல வேண்டும்.

இது தவிர, சில முக்கிய அமைச்சர்கள் தேசிய நாளிதழ்கள் மற்றும் அந்தந்த மாநிலங்களில் உள்ள முக்கிய நாளிதழ்களில் மத்திய அரசின் சாதனைகளை விளக்கி கட்டுரைகளையும் எழுத வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவை அனைத்தையும், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் ஒருங்கிணைக்கும்படி உத்தரவுகள் பறந்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன

- நமது டில்லி நிருபர் - .





      Our Apps Available On




      Dinamalar

      Follow us