'போயிங் 737' விமானங்களில் பிரச்னை; விமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை
'போயிங் 737' விமானங்களில் பிரச்னை; விமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை
'போயிங் 737' விமானங்களில் பிரச்னை; விமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை
ADDED : ஜன 01, 2024 04:40 AM
புதுடில்லி : 'போயிங் 737 மேக்ஸ்' விமானங்களின் கட்டுப்பாட்டு பகுதியில் பிரச்னை கண்டறியப்பட்டதை அடுத்து, உரிய ஆய்வு மேற்கொள்ள சர்வதேச விமான நிறுவனங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அனுமதி
அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் நிறுவனம் தயாரித்த '737 மேக்ஸ்' என்ற பயணியர் விமானம், அதிநவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டதை அடுத்து, அவற்றை சர்வதேச விமான நிறுவனங்கள் போட்டிப்போட்டு வாங்கின.
கடந்த 2019ல் ஆசிய நாடான இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில், இந்த போயிங் 737 விமானம் விபத்தில் சிக்கி, அதில் பயணித்த 356 பேரும் பலியாகினர்.
இதையடுத்து, இந்த விமானங்களின் இயக்கம் ஒட்டு மொத்தமாக நிறுத்தப்பட்டன. இரண்டு ஆண்டுகளுக்குப் பின், கடந்த 2021ல் இருந்து மீண்டும் போயிங் 737 விமானம் வானில் பறக்க அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து, உலகளவில் பல முன்னணி விமான நிறுவனங்கள் இந்த விமானங்களை இயக்கி வருகின்றன. நம் நாட்டில், 'ஆகாஷா ஏர், ஸ்பைஸ் ஜெட், ஏர் இந்தியா' ஆகிய நிறுவனங்கள் இந்த விமானங்களை பயன்பாட்டில் வைத்துள்ளன.
இந்நிலையில், போயிங் 737 விமானத்தில் குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, அமெரிக்க விமான போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது:
பிரச்னை
போயிங் நிறுவனத்தின் மேக்ஸ் 737 என்ற விமானத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, அதன் கட்டுப்பாட்டு உதிரி பாகங்களில் பிரச்னை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால், அந்த வகை விமானங்களில் சர்வதேச நிறுவனங்கள் உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஏதேனும் குறைபாடு இருந்தால் உடனடியாக தெரிவிக்கவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து நம் நாட்டில் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் கூறுகையில், 'போயிங் 737 மேக்ஸ் விமானம் குறித்த பிரச்னை கவனத்தில் ஏற்கப்பட்டது. இந்த விமானங்களை இயக்கும் மூன்று இந்திய நிறுவனங்களிடம் தொடர்பில் உள்ளோம்' என, தெரிவித்துள்ளது.
'விமானங்களில் உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் விமான சேவை எதுவும் பாதிக்கப்படவில்லை' என, அந்த விமானத்தை பயன்படுத்தி வரும் இந்திய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.