ராஜ்யசபாவில் பா.ஜ., எம்.பி.,க்கள் எண்ணிக்கை குறைந்தது!
ராஜ்யசபாவில் பா.ஜ., எம்.பி.,க்கள் எண்ணிக்கை குறைந்தது!
ராஜ்யசபாவில் பா.ஜ., எம்.பி.,க்கள் எண்ணிக்கை குறைந்தது!
ADDED : ஜூலை 15, 2024 05:10 PM

புதுடில்லி: ராஜ்யசபாவில் 4 நியமன எம்.பி.,க்களின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, பா.ஜ.,வின் எம்.பி.,க்கள் எண்ணிக்கை 86 ஆக குறைந்தது. தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்கள் எண்ணிக்கை 101 ஆக உள்ளது. இதனால் மசோதாவை ராஜ்யசபாவில் நிறைவேற்றுவதில் ஆளும் பா.ஜ., அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ராஜ்யசபாவில் மொத்தம் 245 எம்.பி.,க்கள் உள்ளனர். இதில், 233 பேர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மீதியுள்ள 12 பேர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார்கள். அதில், கலை, இலக்கியம், விளையாட்டு, தொழில்துறை, சமூக சேவை, பத்திரிகையாளர் எனப் பலதரப்பட்ட ஆளுமைகளின் பெயர்களை மத்திய அரசு பரிந்துரை செய்யும். அதனை ஏற்று ஜனாதிபதி, அந்த பட்டியலில் உள்ளவர்கள் ராஜ்யசபா எம்.பி.,யாக ஒப்புதல் வழங்கி அறிவிப்பார்.
அவர்கள் ராஜ்யசபா தலைவர் பொறுப்பு வகிக்கும் துணை ஜனாதிபதி முன்னிலையில் எம்.பியாக பதவியேற்பார்கள். பொதுவாக நியமன எம்.பி.,யாக பதவியில் உள்ளவர்கள், மத்திய அரசின் பரிந்துரையில் இருப்பதால், அவர்கள் மத்திய அரசுக்கு ஆதரவான போக்கையே கடைபிடிப்பர். அந்த வகையில் தற்போது ராஜ்சபாவில் ஆளும் பா.ஜ.,வுக்கு ஆதரவாக 90 எம்.பி.,க்கள் உள்ளனர். அவர்களில் 4 பேரின் பதவிக்காலம் கடந்த ஜூலை 13ம் தேதி முடிவடைந்தது. இதனால் பா.ஜ.,வின் எம்.பி.,க்கள் எண்ணிக்கை 86 ஆக குறைந்துள்ளது.
இண்டியா கூட்டணி
அதேசமயம் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பி.,க்கள் எண்ணிக்கை 101 ஆக உள்ளது. ராஜ்யசபாவில் ஏதேனும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டால் அதற்கு பெரும்பான்மை எம்.பி.,க்கள் (குறைந்தது 123 எம்.பி.,க்கள்) ஆதரவு தேவை. அதற்கு தே.ஜ., அல்லது இண்டியா கூட்டணியில் இடம்பெறாத அதிமுக (4), ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் (11), நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் (9) ஆகிய கட்சிகள் யாருக்கு ஆதரவளிக்குமோ அதைப்பொருத்து மசோதா நிறைவேறும்.
ராஜ்யசபாவில் காங்கிரஸ் கட்சிக்கு 26, திரிணமுல் காங்கிரசுக்கு 13, ஆம்ஆத்மி மற்றும் திமுக.,வுக்கு தலா 10 உள்பட இண்டியா கூட்டணிக்கு மொத்தம் 87 எம்.பி.,க்கள் உள்ளனர்.