கர்நாடக முதல்வர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி பா.ஜ.,வினர் முற்றுகை போராட்டம்
கர்நாடக முதல்வர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி பா.ஜ.,வினர் முற்றுகை போராட்டம்
கர்நாடக முதல்வர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி பா.ஜ.,வினர் முற்றுகை போராட்டம்
ADDED : ஜூலை 19, 2024 05:45 AM

பெங்களூரு : முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்யும்படி வலியுறுத்தி, பா.ஜ.,வினர் நேற்று விதான் சவுதா முற்றுகை போராட்டம் நடத்தினர். அவர்கள் பாதி வழியிலேயே கைது செய்யப்பட்டனர்.
வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு; எஸ்.சி., - எஸ்.டி., சமுதாய நிதியை வாக்குறுதி திட்டங்களுக்கு பயன்படுத்தி கொண்டது; மைசூரு நகர மேம்பாட்டு ஆணையத்தில், முதல்வர் மனைவி பார்வதிக்கு மனை ஒதுக்கியது உட்பட காங்கிரஸ் ஆட்சியில் பல முறைகேடுகள் நடந்ததாக பா.ஜ.,வினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சுதந்திர பூங்கா
இதற்கு முழு பொறுப்பேற்று கொண்டு, முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்யும்படி வலியுறுத்தி, மாநில தலைவர் விஜயேந்திரா தலைமையில் அக்கட்சியினர் பெங்களூரு சுதந்திர பூங்காவில் நேற்று போராட்டம் நடத்தினர்.
முறைகேடுகள் குறித்து பதாகைகளை ஏந்தி கொண்டு, அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், பெங்., மாநகராட்சி கவுன்சிலர்கள் உட்பட பலர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
அங்கிருந்து, விதான் சவுதாவை முற்றுகையிட புறப்பட்டனர். அவர்களை சேஷாத்திரி சாலையில் தடுப்புகள் அமைத்து போலீசார் தடுத்தனர். அப்போது போலீசாரிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் அனுமதி அளிக்காததால், தடுப்புகள் மீது ஏறி செல்ல முற்பட்டனர்.
பி.எம்.டி.சி., பஸ்கள்
இதையடுத்து, விஜயேந்திரா உட்பட பா.ஜ.,வினரை போலீசார் கைது செய்து பி.எம்.டி.சி., பஸ்களில் ஏற்றினர். சற்று துாரத்தில் அந்த பஸ்கள் மீதே ஏறி கொண்டு போராட்டம் நடத்தினர். அவர்களையும் கைது செய்தனர்.
அனைவரும் கைது
இங்கிருந்து சென்ற கோலார் முன்னாள் எம்.பி., முனிசாமி உட்பட சிலர், விதான் சவுதா கிழக்கு நுழைவு வாயில் பகுதியில் போராட்டம் செய்தனர். அவர்களையும் கைது செய்தனர்.
கைது செய்த அனைவரையும் சாம்ராஜ்பேட்டையில் உள்ள நகர ஆயுதபடை மைதானத்தில் இறக்கி, விபரங்களை பெற்று கொண்டு சுய ஜாமின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்.
பா.ஜ.,வினர் போராட்டத்தால், விதான் சவுதாவை சுற்றி உள்ள ரேஸ்கோர்ஸ் சாலை, அம்பேத்கர் வீதி, அரண்மனை சாலை, சேஷாத்திரி சாலை, கே.ஜி.சாலை இப்படி முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.