Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/கர்நாடகாவில் பா.ஜ., 17, காங்., 9, ம.ஜ.த., 2ல் வெற்றி :கருத்து கணிப்பை பொய்யாக்கிய முடிவால் தலைவர்கள் ஏமாற்றம்

கர்நாடகாவில் பா.ஜ., 17, காங்., 9, ம.ஜ.த., 2ல் வெற்றி :கருத்து கணிப்பை பொய்யாக்கிய முடிவால் தலைவர்கள் ஏமாற்றம்

கர்நாடகாவில் பா.ஜ., 17, காங்., 9, ம.ஜ.த., 2ல் வெற்றி :கருத்து கணிப்பை பொய்யாக்கிய முடிவால் தலைவர்கள் ஏமாற்றம்

கர்நாடகாவில் பா.ஜ., 17, காங்., 9, ம.ஜ.த., 2ல் வெற்றி :கருத்து கணிப்பை பொய்யாக்கிய முடிவால் தலைவர்கள் ஏமாற்றம்

ADDED : ஜூன் 04, 2024 11:19 PM


Google News
Latest Tamil News
கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 லோக்சபா தொகுதிகளுக்கு, ஏப்ரல் 26, மே 7 என இரண்டு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்தது. பா.ஜ., - 25, ம.ஜ.த., - 3, காங்., - 28 தொகுதிகளில் போட்டியிட்டன.

பலத்த பாதுகாப்புடன், நேற்று காலை 8:00 மணிக்கு, ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. பின், ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன.

8ல் தோல்வி


ஆரம்ப சுற்றுகளில், ஒவ்வொரு வேட்பாளரும், மாறி, மாறி முன்னிலை வகித்து வந்தனர். அடுத்தடுத்த சுற்றுகளில் நிலைமை தலைகீழாக மாறியது. ஆரம்பத்தில் முன்னிலை வகித்தவர்கள், பின்னர் பின்னடைவை சந்தித்தனர்.

கடந்த 2019ல் பா.ஜ., - 25, ம.ஜ.த., - 1, காங்., - 1, சுயேச்சை - 1 தொகுதியிலும் வெற்றி பெற்றிருந்தன. தற்போது நடந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின்படி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, 23 - 25 தொகுதிகளிலும், காங்கிரசுக்கு 3 - 5 தொகுதிகளிலும் வெற்றி கிடைக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் தலைவர்கள், தங்களுக்கு 20 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்று உறுதியாக நம்பினர்.

ஆனால், கருத்து கணிப்புகளை பொய்யாக்கி, பா.ஜ., - 17, ம.ஜ.த., - 2, காங்., - 9 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. 2019 தேர்தலை ஒப்பிடுகையில், பா.ஜ., எட்டு தொகுதிகளில் தோல்வி அடைந்துள்ளது. அதே வேளையில், காங்கிரசுக்கு எட்டு தொகுதிகளிலும், ம.ஜ.த.,வுக்கு ஒரு தொகுதியிலும் கூடுதல் வெற்றி கிடைத்துள்ளது.

தலைவர்கள் அதிர்ச்சி


இந்த முடிவுகள், பா.ஜ., - காங்., தலைவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. குறிப்பாக, மத்திய அரசு திட்டங்களை அதிக அளவில் கர்நாடகாவில் அமல்படுத்திய பா.ஜ.,வுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு, அக்கட்சி தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக, பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியானது பா.ஜ., பின்னடைவுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. ஏனென்றால், காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள பீதர், தாவணகெரே, சிக்கோடி, ராய்ச்சூர், கொப்பால், பல்லாரி, கலபுரகியை கடந்த முறையும், பெரும்பாலான தொகுதிகளில் பா.ஜ., பல ஆண்டுகளாக தன்னுடைய இரும்பு கோட்டையாக வைத்திருந்தது.

வீடியோ தாக்கம்


ஆனால், பிரஜ்வலின் ஆபாச வீடியோக்கள் வெளியான பின், இரண்டாம் கட்ட தேர்தல் நடந்த ஏழு தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வேளை ஆபாச வீடியோக்கள் வெளியாகாமல் இருந்திருந்தால், கல்யாண கர்நாடகாவில், வெற்றி நிலவரம் மாறி இருக்கும்.

மேலும், ஹாசன் ம.ஜ.த.,வின் இரும்பு கோட்டை என்பது அனைவருக்கும் தெரியும். முன்னாள் பிரதமர் தேவகவுடா தொடர்ந்து வெற்றி பெற்று வந்தார். 2019ல், பேரன் பிரஜ்வலுக்கு விட்டு கொடுத்து, வெற்றி பெற செய்தார். ஆனால், இம்முறை அவரது தோல்வியால், ஹாசன் தொகுதி கைவிட்டு போய்விட்டதே என்று தேவகவுடா குடும்பம் கவலையில் உள்ளது.

மன்னர் யதுவீர்


முதல்வர் சித்தராமையாவின் சொந்த மாவட்டம் என்பதால், மைசூரில் பா.ஜ., வேட்பாளராக களமிறக்கப்பட்ட மன்னர் யதுவீர் வெற்றி பெறுவாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், பா.ஜ., தொண்டர்களும், அவரது ஆதரவாளர்களும் கை விடாமல் காப்பாற்றியதால், 1.39 லட்சத்துக்கும் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மத்திய அமைச்சர் தோல்வி


பீதரில், மத்திய இணை அமைச்சர் பகவந்த் கூபா, இரண்டு முறை எம்.பி.,யாக இருந்தவர். 57 வயதாகும் இவரை, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரேவின் 26வயது மகன் சாகர் கன்ட்ரே தோற்கடித்து உள்ளார்.

கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், வாக்குறுதி திட்டங்களால் அதிக தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்று கருதிய காங்கிரஸ் தலைவர்களும் சோகத்தில் உள்ளனர்.

பெங்களூரு நகர மாவட்டத்தில், 3 தொகுதிகள் உள்ளன. இந்த மூன்றும், 2014, 2019ல் பா.ஜ., வசம் இருந்தன. தற்போது மீண்டும் வெற்றி பெற்று, அந்த தொகுதிகளை தக்க வைத்து கொண்டுள்ளது.

பெங்., தெற்கில், தேஜஸ்வி சூர்யா இரண்டாவது முறையாகவும், பெங்., வடக்கில் மத்திய இணை அமைச்சர் ஷோபா முதல் முறையாகவும், பெங்., சென்ட்ரலில் பி.சி.மோகன், நான்காவது முறையாகவும் வெற்றி பெற்றுள்ளனர்.

கார்கே மருமகன்


கலபுரகியில் காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மருமகன் ராதாகிருஷ்ணா முதல் முறையாகவும்; ஷிவமொகாவில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா, நான்காவது முறையாகவும் வெற்றி பெற்றுள்ளனர்.

ஆனால், பெங்களூரு ரூரலில் துணை முதல்வர் சிவகுமாரின் தம்பி சுரேஷ்; ஷிவமொகாவில் சுயேச்சை வேட்பாளர் ஈஸ்வரப்பா; சிக்கோடியில் அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரின் மகன் மிருணாள் ஹெப்பால்கர் உட்பட முக்கிய பிரமுகர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

சுர்பூரில் காங்கிரஸ் வெற்றி

யாத்கிர் மாவட்டம், சுர்பூர் சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருந்த ராஜா வெங்கடப்பா நாயக், சில மாதங்களுக்கு முன், காலமானார்.

அவரது இறப்பால் காலியான சுர்பூர் தொகுதிக்கு, மே 7ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில், அவரது மகனும், காங்கிரஸ் வேட்பாளருமான ராஜா வேணுகோபால் நாயக், 1,14,886 ஓட்டுகளும்; பா.ஜ., வேட்பாளர் நரசிம்ம நாயக் 96,566 ஓட்டுகளும் பெற்றனர். காங்கிரஸ் வேட்பாளர் 18,320 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us