ADDED : ஜூன் 04, 2024 11:17 PM

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆறு அமைச்சர்களின் வாரிசுகளில், மூன்று பேர் வெற்றி பெற்றனர்; மூவர் தோல்வியை தழுவினர்.
லோக்சபா தேர்தலில் சிக்கோடியில் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியின் மகள் பிரியங்கா; பெலகாவியில் அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரின் மகன் மிருணாள்; சாம்ராஜ் நகரில் அமைச்சர் மஹாதேவப்பாவின் மகன் சுனில் போஸ்;
பெங்களூரு தெற்கில் அமைச்சர் ராமலிங்க ரெட்டியின் மகள் சவுமியா ரெட்டி; பீதரில் அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரேயின் மகன் சாகர் கன்ட்ரே; பாகல்கோட்டில் அமைச்சர் சிவானந்த பாட்டீல் மகள் சம்யுக்தா பாட்டீல் ஆகியோர் களமிறக்கப்பட்டனர்.
இதில், சிக்கோடி, சாம்ராஜ் நகர், பீதரில் வெற்றியும்; பெலகாவி, பெங்களூரு தெற்கு, பாகல்கோட்டில் தோல்வியும் அடைந்துள்ளனர்.
வாரிசுகளுக்கு 'சீட்' கேட்ட அமைச்சர்களிடம், 'வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும். இல்லை என்றால், உங்கள் அமைச்சர் பதவி பறிக்கப்படும்' என, கட்சி மேலிடம் ஏற்கனவே எச்சரித்திருந்தது.
தற்போது மூன்று வாரிசுகள் தோல்வி அடைந்துள்ளதால், அமைச்சர்கள் 'கிலி' அடைந்துள்ளனர்
- நமது நிருபர் -.